விருத்தாசலம்; தொடர் மழையின் காரணமாக, விருத்தாசலத்தில் உள்ள செராமிக் தொழிற் சாலையில் பணிகள் முடங்கியதால்,3,000 தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கிறனர்.
மாவட்ட நிர்வாகம், உரிய நிவாரணம் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். விருத்தாசலத்தில் உள்ள செராமிக் தொழிற் சாலையில் 200க்கும் மேற்பட்ட செராமிக் கம்பெனிகள் உள்ளன. இந்த செராமிக் கம்பெனிகளில் தினசரி 40 முதல் 50 டன் வரை அகல் விளக்கு, பொம்மை மற்றும் ரெப்ராக்டரீஸ் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இதனை உற்பத்தி செய்யும் பணியில், வட மாநில தொழிலாளர்கள் உட்பட 3,000 பேருக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு உற்பத்தியாகும் அகல் விளக்குகள் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், கனடா, ஓமன், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்நிலையில் நிவர், புரெவி புயலின் தாக்கத்தால், கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அகல் விளக்கு, பொம்மை மற்றும் ரெப்ராக்டரீஸ் பொருட்கள் செய்யும் பணி ஒருவாரமாக தடைபட்டுள்ளது. இதனால் 3,000 பேருக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் உள்ளனர்.மேலும், கடந்த வாரம் உற்பத்தி செய்த அகல் விளக்குகள் ஈரப்பதமாக உள்ளதால், அதனை உலர வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதியடைகின்றனர்.
ஒரு சிலர் மட்டும் ஈரப்பதமான அகல் விளக்குகளை, பெரிய ஹாலில் பரவலாக கொட்டி, ராட்சத பேன்களின் உதவியோடு, மரக்கரி துண்டுகளை, ஒரு இரும்பு சட்டியில் வைத்து எரிந்து, அகல் விளக்குகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.5,000 வரை மரக்கரிகளை வாங்கி வந்து அகல் விளக்குகளை உலர்த்தி வருகின்றனர்.வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம், உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE