சென்னை - சென்னையின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை புதிய ஏரியில், பாதி கொள்ளளவு நீர் நிரம்பியுள்ளதால், பொதுப்பணித்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன்கோட்டை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக, பெரிய ஏரி உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசால், 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த ஏரியில், 0.50 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். மழைநீர் மட்டுமின்றி, ஊத்துக்கோட்டையில் இருந்து ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறக்கப்படும் கிருஷ்ணா நீரை எடுத்து வருவதற்கும், தனி கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2013ம் ஆண்டு துவங்கிய கட்டுமான பணி, நீண்ட இழுபறிக்கு பின், சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த புதிய ஏரியை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அர்ப்பணித்து வைத்தார். இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக, இந்த ஏரிக்கு தொடர்ந்து நீர் கிடைத்து வருகிறது. வினாடிக்கு, 75 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இதனால், ஏரியின் நீர் இருப்பு, 0.25 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. ஏரி பாதி கொள்ளளவு நிரம்பியுள்ளதால், பொதுப்பணித்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஏரி நீர், இந்த ஆண்டு முதல் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE