அம்பத்துார் - சென்னை, மதுரவாயலில், திறந்தவெளி மழை நீர் வடிகாலில் மூழ்கி பலியான, தாய், சகோதரியை இழந்து, 87 வயது தாத்தாவுடன், ஆதரவின்றி பரிதவிக்கும், 14 வயது சிறுமியின் நிலையை கண்டு, அப்பகுதி மக்கள் கண்கலங்கி நிற்கின்றனர்.
சென்னை, திருவேற்காடு, அயனம்பாக்கம், ராஜாங்குப்பம் சாலை, எஸ்.பி., ஹோம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் கரோலின் பிரிசில்லா, 50. அவரது கணவர் எட்வின். கடலுாரில், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த அவர், 2014ல் இறந்தார்.
சடலமாக மீட்பு
இதையடுத்து, கரோலின், தனது மகள்கள் இவாலின், 20 மற்றும் 14 வயது மகள், தந்தை பர்னேஸ், 87. ஆகியோருடன், மூன்று ஆண்டுகளுக்கு முன், அயனம்பாக்கத்தில் குடியேறினார். கரோலின், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். மூத்த மகள், தனியார் கல்லுாரியில் கட்டடக்கலை வல்லுனர் பட்டம் படித்து வந்தார். அவரது, 14 வயது மகள், நொளம்பூரில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த, 6ம் தேதி இரவு, கரோலின் பிரிசில்லா, இவாலின் ஆகியோர், இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்றனர். இருவரும், மதுர வாயல் புறவழிச் சாலையின், அணுகு சாலையில் உள்ள திறந்தவெளி மழை நீர் வடிகாலில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இசையில் ஈடுபாடு
ஏற்கனவே தந்தையை இழந்த சிறுமி, ஒரே இரவில், தாய், சகோதரி என, இருவரையும் இழந்ததால், மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளார். வாய் விட்டு அழ கூட முடியாத நிலையில் உள்ள சிறுமியை பார்த்து, அப்பகுதி மக்கள் கண்கலங்கி நிற்கின்றனர்.தற்போது, சிறுமிக்கு ஒரே உறவாக, தாத்தா பர்னேஸ் மட்டுமே உள்ளார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த நாள் முதல், சிறுமிக்கும், அவரது தாத்தாவுக்கும் வேண்டிய உதவிகளை, வீட்டருகே வசிக்கும் குடும்ப நண்பர் நிக்சன்ராஜ், 40, செய்து வருகிறார்.தாய், மகள் இருவரது உடல்களும், நேற்று முன்தினம், கடலுாரில் அடக்கம் செய்யப்பட்டன. சிறுமியும், அவரது தாத்தாவும், இழப்பின் தாக்கத்தில் இருந்து, மீள முடியாத நிலையில், வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.
நிக்சன்ராஜ் கூறியதாவது: கரோலின் பிரிசில்லா, தனது குழந்தைகளை கட்டுப்பாடுடன் நல்ல முறையில் வளர்த்து, அவர்களுக்கு உரிய கல்வியை கொடுத்து வந்தார். அவருக்கும், அவரது மூத்த மகள் இவாலினிக்கும், இசையில் நல்ல ஈடுபாடு உண்டு.
தேவை அதிகம்
தாய், சகோதரி இழப்பிற்கு பின், இளைய மகளும், அவரது தாத்தாவும், நிர்க்கதியாக உள்ளனர். பெரிய அளவில், நெருங்கிய உறவுகள் இல்லாத நிலையில், அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. சிறுமி, மனம் விட்டு அழக்கூட முடியாமல், ஆறாத சோகத்தை அடக்கி வைத்துள்ளார். மற்றவர்களை பார்க்கும் போது, 'எங்களுக்கு ஆதரவாக இனி யார் இருக்கின்றனர்' என்று கேட்பது போன்ற, அவரது பார்வையில் உள்ள வலியை, எங்களால் உணர முடிகிறது. இருவரை இழந்த குடும்பத்திற்கு, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் போதாது. சிறுமியின் கல்வி, எதிர்காலம், அவரது தாத்தாவின் மருத்துவம், பராமரிப்பு என, பொருளாதார தேவை அதிகம் உள்ளது. அவர்கள் வசிக்கும் வீடும், வங்கி கடன் மூலம் வாங்கியது தான்.அந்த குடும்பத்தின் பொருளாதார தேவைக்கு, அரசு நியாயமான உதவி செய்ய வேண்டும். அரசின் பராமரிப்பில் உள்ள சாலையில், அவர்கள் உயிரிழந்த சம்பவம், எப்படி நடந்தது என்பதற்கு, தெளிவான சாட்சியம் இல்லை.
நடவடிக்கை
அந்த இடம் விளக்கு வெளிச்சம் இன்றி, தனியார் நிறுவனங்களின் கழிவுநீர் தேங்கும், இருட்டு பகுதியாக உள்ளது. அவர்கள், வாகனத்தில் சென்ற போது, நிலைதடுமாறி விழுந்தார்களா, வேறு வாகனம் ஏதும் மோதி விபத்து ஏற்பட்டதா அல்லது வழிப்பறி போன்ற சம்பவத்தால் உயிரிழப்பு நிகழ்ந்ததா என்பதற்கு கேமரா காட்சி ஆதாரம் இல்லை.சம்பவம் குறித்து, தெளிவான விசாரணையை, போலீசார் நடத்த வேண்டும். தொடர்ந்து உயிர்பலி வாங்கும் திறந்தவெளி மழைநீர் வடிகாலில், இனி ஒரு உயிரிழப்பு ஏற்படாத வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
படிப்பு செலவை ஏற்ற அமைச்சர்!
சம்பவம் நடந்த இடமும், பலியானவர்கள் வசித்த பகுதியும், மதுரவாயல் தொகுதியில் உள்ளது. அந்த தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான பெஞ்சமின், சிறுமியின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறுகையில், ''முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர் செங்கோட்டையனுடன், செங்கல்பட்டு மாவட்ட வெள்ள பாதிப்பு பணிகளை ஆய்வு செய்து வருவதால், சிறுமியின் வீட்டிற்கு சென்று, ஆறுதல் கூற முடியவில்லை. எனது மனைவி ஷீலா, மூத்த மகன் விஜய் பெர்லின் இருவரும், சிறுமியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். ''அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அரசின் நிவாரணம், உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நானே நேரில் சென்று, நிவாரண தொகையை அளிப்பேன். தனிப்பட்ட முறையில், சிறுமியின் படிப்பு செலவை ஏற்பேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE