தியாகதுருகம் : காடுகளில் இருந்து மழை வெள்ளம் வெளியேறாமல் வனத்துறையினர் மண்ணால் 3 அடி உயரத்திற்கு கரைஅமைத்ததால் நீர்வரத்து குறைந்து ஏரிகள் நிரம்பாதது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளதுடன், வனத்துறையினர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன்மலையில் தொடங்கி பல லட்சம் ஏக்கர் பரப்பில் தரைக் காடுகள் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலுார் பகுதிகளையொட்டி இக்காடுகள் உள்ளன.இந்த வனப்பகுதி காப்புக் காடுகளாக இருந்த வரை இங்கு பெய்யும் மழை நீர் காட்டு வெள்ளமாக ஓடை வழியாகச் சென்று அருகில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.இதனால் ஒவ்வொரு ஆண்டும் சராசரி அளவைவிட மழை குறைவாக பெய்தாலும் காடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் வரத்து கிடைத்து ஏரிகள் நிரம்பின. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது, ஆயக்கட்டு பாசன நிலங்களில் விவசாயம் செழித்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் காப்புக் காடுகள் அழிக்கப்பட்டு வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடப்பட்டன. இவை தகுந்த பருவத்தில் அறுவடை செய்து பேப்பர் உற்பத்திக்காக அனுப்பப்படுகிறது.இதன் மூலம் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கிறது. இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டதால் இங்கு வாழ்ந்த வனவிலங்குகள் பெரும்பாலானவை அழிந்தன. பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழையும் குறைந்ததுடன், கோடையில் கடும் வெப்பமும் நிலவுகிறது.
தற்போது வளர்க்கப்படும் யூக்கலிப்டஸ் மரங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் காடுகளைச் சுற்றி 3 அடி உயரத்திற்கு மண் தடுப்புகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.இதனால் மழை வெள்ளம் காடுகளை விட்டு வெளியேற வழியின்றி தடுக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக காட்டு வெள்ளத்தை ஆதாரமாகக்கொண்டு நிரம்பும் நுாற்றுக்கணக்கான ஏரிகளுக்கு சமீபத்திய மழையால் நீர்வரத்து கிடைக்கவில்லை.இதனால் கடந்த 20 நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை. இதனால் ஆயக்கட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளதுடன், வனத்துறையினர் மீது அதிருப்தியடைந்துள்ளனர்
.யூக்கலிப்டஸ் மரங்களைப் பாதுகாப்பதற்காக வனத்துறையின் இந்த நடவடிக்கை பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் ஜீவாதாரத்தை பாதித்துள்ளது. காடுகளில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஏரிகளுக்கு வந்தால் மட்டுமே பல நுாறு ஏரிகள் நிரம்பும் நிலை உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு காடுகளிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE