ஈரோடு: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் உட்பட, நான்கு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில், காளிங்கராயன் பாசன பகுதியில், நெல் அறுவடை துவங்கியது. இதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், 17 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவானது. நேற்று, புதுவள்ளியாம்பாளையம், ஏளூர், நஞ்சை புளியம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தில் நேற்று விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்கி, கொள்முதலை டி.ஆர்.ஓ., கவிதா துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மையங்களில் 'ஏ' கிரேடு ரக நெல் குவிண்டால், 1,958 ரூபாய் விகிதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டால், 1,918 ரூபாய் விகிதத்திலும் கொள்முதல் செய்யப்படும். இங்கு வரும் விவசாயிகள், வி.ஏ.ஓ., சான்று, நெல் விளைவித்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், விவசாயி வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 2 எடுத்து வர வேண்டும். மேலும், இன்று (10) முதல், கரட்டடிபாளையம், மேவாணி, கூகலூர், நஞ்சை கவுண்டன்பாளையம், புதுக்கரைப்புதூர், பி.மேட்டுப்பாளையம், சவுண்டப்பூர் (அத்தாணி), காசிபாளையம், டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, பொன்னாச்சிபுதூர், பொலவகாளிபாளையம், கருங்கரடு ஆகிய, 13 இடங்களில் கொள்முதல் நிலையம் செயல்பட துவங்குகிறது. நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதி, துணை மண்டல மேலாளர் விஜயா, தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் லியோராபர்ட் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE