ஈரோடு: சத்தியமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட, 15 பஞ்சாயத்துகளில், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து, நான்கு வாரத்துக்கு மேல் ஊதியம் வழங்காததால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷிடம் முறையிட்டனர். சத்தியமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட, 15 பஞ்.,களில், 100 நாள் வேலை திட்டப்பணியில் ஈடுபட்டால், 256 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இவர்களுக்கான ஊதியத்தை, 15 நாளில் வழங்க வேண்டும். கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாகியும், பல பஞ்.,களில் ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கிடையில், சத்தியமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் வந்த மாவட்ட திட்ட இயக்குனர் பாலகணேஷிடம், ஈரோடு மாவட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் நடராஜ், சுரேந்தர், முருகன், லட்சுமி ஆகியோர் மனு வழங்கி முறையிட்டனர். மனுவை பெற்ற திட்ட இயக்குனர் பாலகணேஷ், ''தொடர்ந்து வேலை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதி பஞ்சாயத்துகளில் எல்லை, பெரியதாக உள்ளது. இதனால், தொழிலாளர்களை பல கி.மீ., அலைய வைக்க இயலாது. எனவே, அந்தந்த பகுதியில் உள்ள கிராமங்களில், வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியத்தை விரைவாக பெற்று வழங்க அரசிடம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE