பவானிசாகர்: யானைகள் சேதப்படுத்திய வாழைகளுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில்,100க்கும் மேற்பட்ட கிராமங்களில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், ஆந்திரா ரஸ்தாளி, நேந்திரன் மற்றும் கதிலி ரக வாழைகளை விவசாயிகள், சாகுபடி செய்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், சாலையை கடந்து, நால்ரோடு, கோடேபாளையம், அம்மாபாளையம், காராச்சிக்கொரை, புங்கார், புதுபீர்க்கடவு உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து, அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஆந்திரா ரஸ்தாளி, கதிலி ரக வாழைகளை சேதப்படுத்தியது. ஏக்கருக்கு, 60 ஆயிரம் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்த விவசாயிகள், நஷ்டத்தை ஈடு கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து, வாழை விவசாயிகள் கூறியதாவது; ஒரு ஏக்கருக்கு, 1,000 வாழைகள் நடவு செய்கிறோம். தண்ணீர் பாய்ச்சவே, நாள் ஒன்றுக்கு மூன்று பேர் வேண்டும். ஒரு நபருக்கு, 350 ரூபாய் சம்பளம், தினசரி தண்ணீர் பாய்ச்சினால் தான் இலை வாடாமல் இருக்கும். யானைகளால் குலை தள்ளிய வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து, பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். சேதமான வாழைகளுக்கு, அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE