சேலம்: சேலம் மாநகராட்சியில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் குறித்த விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதில், கொண்டலாம்பட்டி மண்டலம், குகை மூங்கப்பாடி, மார்க்கெட் தெருக்கள், புது திருச்சி கிளை சாலை, சீல்நாயக்கன்பட்டி அழகு நகர், சாமியப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், நேற்று கள ஆய்வு நடத்தினார். பின், அவர் கூறியதாவது: கடந்த, 16 முதல், வரும், 15 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடக்கிறது. சேலம் வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதி பகுதிகளிலிருந்து, இதுவரை, 16 ஆயிரத்து, 61 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மீதான கள ஆய்வு நடக்கிறது. இன்று(நேற்று) நடந்த அனைத்து கட்சி பிரதி நிதிகள் கூட்டத்தில், விண்ணப்பதாரர்களின் விபர தொகுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபனை இருப்பின் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கண்காணிக்க அறிவுரை: பனமரத்துப்பட்டி ஒன்றிய தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். சேலம் எம்.பி., பார்த்திபன் உள்பட பலர் பேசினர். அப்போது, புது வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், வாக்காளர்களை இடமாற்றம் செய்தல், புது வாக்காளர் சேர்க்கையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
22,236 பேரை நீக்க கோரிக்கை: சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நேற்று, கலெக்டரிடம், மனு அளித்த பின், நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மாவட்டத்தில், தெற்கு, வடக்கு, மேற்கு, ஓமலூர் சட்டசபை தொகுதி ஓட்டுச் சாவடிகள் அமைந்துள்ளன. ஆனால், அதன் கட்டுப்பாட்டில் இருந்து, குடி பெயர்ந்தவர், இறந்தவர் என, 22 ஆயிரத்து, 236 பேர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளனர். அவர்களில், இறந்தவர், 13 ஆயிரத்து, 608 பேர், இருமுறை பதிவு, 2,066, குடி பெயர்ந்தவர், 6,562 பேர் அடங்குவர். குறிப்பிட்ட அனைவரையும், வாக்காளர் பட்டியலில் இருந்து, உடனே நீக்க, ஆதாரங்கள், மனுவுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளன. கள ஆய்வு நடத்தி, மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE