சேலம்: மாவட்டத்தில், நடப்பாண்டு மழையளவு, சராசரி அளவை எட்டுவதால், இதுவரை நிரம்பாத நீர்நிலைகள், இனியாவது புத்துயிர் பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ காற்றால், பரவலாக, விட்டு விட்டு மழை பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, ஆத்தூரில், 11.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. தம்மம்பட்டி, வீரகனூர், வாழப்பாடி, தலா, 10 மி.மீ., மேட்டூர், 9, பெத்தநாயக்கன்பாளையம், 7, கெங்கவல்லி, 5, கரியகோவில், 4, ஆணைமடுவு, இடைப்பாடி, தலா, 2, சேலம், 1.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மாவட்ட சராசரி மழையளவு, 997.9 மி.மீ., அது, 2016ல், 503, 2017ல், 974.6, 2018ல், 663.2, 2019ல், 1,017.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. 2020ல், ஜனவரி முதல், நேற்று வரை, 973.4 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரி அளவை எட்ட, இன்னும், 24.5 மி.மீ., மழை தேவை. நடப்பு டிசம்பர் சராசரி மழை, 55.8 மி.மீ., அதில், நேற்று வரை, 58.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளதோடு, இம்மாதம் முழுதும், அடிக்கடி மழை பெய்ய, அதிக வாய்ப்புள்ளதாக, வானிலை மைய அதிகாரிகள் கூறினர். அதனால், நடப்பாண்டு, சராசரியை விட, கூடுதல் மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ளது. அதனால், ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், ஓரளவு முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதுவரை நிரம்பாத நீர்நிலைகளை கணக்கெடுத்து, அதை, நிரப்ப, மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து, நீராதாரத்தை மேம்படுத்த முனைப்பு காட்ட, விவசாயிகள் வலியுறுத்தினர். முடியாதபட்சத்தில், மேட்டூர் உபரிநீர் திட்டம் மூலம், தண்ணீர் கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் கூறுகையில், 'சேலத்தில், தென்மேற்கு மழையளவு சராசரி, 421 மி.மீ., ஆனால், 559.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, இயல்பை விட, 33 சதவீதம் அதிகம். அதேபோல், வடகிழக்கு பருவமழையும் கைகொடுத்துள்ளதால், அதை முறையாக, சேமிக்க, மாவட்ட நிர்வாகம், தனி கவனம் செலுத்த வேண்டும்' என்றனர்.
கரியகோவில் அணை நீர்மட்டம் உயர்வு: பெத்தநாயக்கன்பாளையம், பாப்ப நாயக்கன்பட்டியில், 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும்படி, கரியகோவில் அணை உள்ளது. சில நாளாக, நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், அந்த அணைக்கு, வினாடிக்கு, 100 கன அடி நீர் வருகிறது. அதில், 25 கன அடி நீரை திறந்துவிடுகின்றனர். மீதி தேக்குவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று, கரியகோவில் அணையில், 98 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. வாழப்பாடி, புழுதிக்குட்டை, ஆணைமடுவு அணை நீர்மட்டம், நேற்று, 57 அடியை எட்டியது. அணையில், 165 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி, வினாடிக்கு, 40 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கெங்கவல்லி, பச்சமலை அடிவாரம், 100 ஏக்கரில் உள்ள, வலசக்கல்பட்டி ஏரி நேற்று நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. மேலும், 10 ஆண்டுக்கு பின், கல்லேரிப்பட்டி ஏரி நிரம்பியதால், 'கிடா' வெட்டி, பூக்கள் தூவி விவசாயிகள் வழிபட்டனர். 5 ஆண்டுக்கு பின்கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வசிஷ்ட நதி குறுக்கே உள்ள நரசிங்கபுரம் தடுப்பணை நிரம்பியது. அதில் இருந்து, ஆத்தூர், தென்னங்குடிபாளையம் புது ஏரி நிரம்பியது. அந்த ஏரி மதகு வழியாக, அய்யனார் கோவில் ஏரிக்கு தண்ணீர் சென்றது. இதனால், 5 ஆண்டுக்கு பின், அந்த ஏரியும் நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. இதனால், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, பாசன விவசாயிகள், நேற்று பூக்கள் தூவி வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE