சேலம்: ஆண்டிப்பட்டி ஊராட்சி தலைவரை கண்டித்து, துணைத்தலைவர் தலைமையில், வார்டு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம், பனங்காடு அருகே, ஆண்டிப்பட்டி ஊராட்சி தலைவராக, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிழரசி. துணைத்தலைவர், அ.தி.மு.க.,வை சேர்ந்த மணிகண்டன், வார்டு கவுன்சிலர்களாக வெங்கடாஜலம், திருவண்ணாமலை, கலைச்செல்வி, வனிதா, சகுந்தலா, வெள்ளையம்மாள் உள்ளனர். இங்கு, ஊராட்சி கூட்டம் மாதந்தோறும் நடத்துவதில்லை. அப்படியே நடத்தினாலும், கவுன்சிலர்கள் விடுக்கும் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பிரச்னை குறித்து தீர்மானமோ, அவற்றை சரிசெய்யவோ நடவடிக்கை எடுப்பது இல்லை. ஊராட்சி வரவு, செலவு கணக்குகளை, கவுன்சிலர்கள் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளால், தலைவருக்கும், துணைத்தலைவர் தலைமையில் கவுன்சிலர்களுக்கும் இடையே 'பனிப்போர்' நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை, மணிகண்டன் தலைமையில் கவுன்சிலர்கள், ஊராட்சி அலுவலக நுழைவாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சேலம் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் உமாசங்கர், பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பையும் சமாதானப்படுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE