ஓசூர்: 'தளி தொகுதியில் போட்டியிட, இ.கம்யூ., கட்சிக்கு எல்லா தகுதியும் உள்ளதால், தி.மு.க.,விடம் பேசி இ.கம்யூ., கட்சி போட்டியிடும்' என, அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் கூறியது, தி.மு.க.,வினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி முன்னாள் இ.கம்யூ.,- எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தற்போதைய தி.மு.க.,- எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர், வரும் தேர்தலில் மீண்டும் தளி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகின்றனர். தளி தொகுதியில் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்கள் வீடுகளில் நடக்கும் சுப, துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று, ராமச்சந்திரன், அதனக்கு ஆதரவை பெருக்கி வருகிறார். எம்.எல்.ஏ., பிரகாஷ், ராமச்சந்திரன் இடையே உள்ள, 'ஈகோ' பிரச்னை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், தி.மு.க., கூட்டணியை பிளவுப்படுத்தியுள்ளது. போராட்டங்களை கூட தனித்தனியாக நடத்துகின்றன. தளி தொகுதியில், இ.கம்யூ., கட்சியுடன் ஒப்பிடும் போது, தி.மு.க.,வின் செயல்பாடு பின்னடைவாக தான் உள்ளது. நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில், விவசாயிகளுக்கு ஆதரவாக, தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., போராட்டம் ஏதும் நடத்தவில்லை. இப்படி தேர்தல் நெருங்கும் நேரத்தில், தி.மு.க.,வின் அலட்சியத்தை பயன்படுத்தி, இ.கம்யூ., கட்சி வளர்த்து வருகிறது. இந்நிலையில், 'தளி தொகுதியில் போட்டியிட, இ.கம்யூ., கட்சிக்கு எல்லா தகுதியும் உள்ளதால், தி.மு.க.,விடம் பேசி, இ.கம்யூ., கட்சி போட்டியிடும்' என, அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன் கூறியது, தி.மு.க.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளி தொகுதி கைவிட்டு போனால், எம்.எல்.ஏ., பிரகாஷ், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என, தி.மு.க.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE