கோபி: கற்போம், எழுதுவோம் திட்டத்தில், ஈரோடு மாவட்டம், கோபி யூனியனில், கல்லாதவர்களுக்கு, கோடு போட்டு எழுதும், கோட்டெழுத்துக்கள் கற்பித்து, அடிப்படை எழுத்தறிவில் அசத்தல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், கற்போம், எழுதுவோம் திட்டம், என்ற வயது வந்தோர் கல்வி திட்டம், ஈரோடு மாவட்டத்தில், யூனியன் வாரியாக துவங்கப்பட்டுள்ளது. இதில், 15 வயதுக்கு மேற்பட்ட, கல்லாதவர்களை கண்டறிந்து, அடிப்படை எழுத்தறிவு போதிக்கின்றனர். கடந்த நவ.,30 முதல், கோபி யூனியனில், 60 மையங்களில், 1,218 கல்லாதவர்களுக்கு, தன்னார்வலர்களை கொண்டு, அடிப்படை எழுத்தறிவு போதிக்கின்றனர். தினமும் இரண்டு மணி நேரம் வகுப்புகள் நடக்கிறது. இந்த மையங்களில், தற்போது தமிழ் பாட வரிசையில், கோடு போட்டு எழுதும், கோட்டெழுத்துக்களை எழுத கற்று கொடுக்கின்றனர். உதாரணமாக, 'ட, ப, ம, ய, ர, வ, ந, என எழுத்துக்களை, கல்லாதவர்களுக்கு கோடு போட்டு எழுத கற்றுத் தருகின்றனர்.
இதுகுறித்து, தன்னார்வலர்கள் கூறியதாவது: துவக்க வகுப்புகளில், குழந்தைகளுக்கு உயிர் எழுத்துக்களில் முதலில் 'அ' எழுத கற்று கொடுப்பர். ஆனால், வயது முதிர்ந்தவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், கோடு போட்டு எழுதும், கோட்டெழுத்துக்களை ஒரு வாரமாக கற்று தருகிறோம். இதனால் கையெழுத்து பழக்கம், கல்லாதவர்களிடம் அதிகரித்துள்ளது. எழுத்துக்கள் அறிந்த பின், படமும் பாடமும், எண்கள் அறிவது என, போதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE