ஈரோடு: ஈரோட்டில், குழந்தை கடத்தலில் ஈடுபட முயன்ற, மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, பி.பெ. அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார அலுவலக செவிலியர் அகிலா. இவர் மொபைல் போனுக்கு கடந்த, 5ல், பேசிய பெண் ஒருவர், விலைக்கு பச்சிளம் குழந்தை வேண்டும்; குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள், இருந்தால் தெரிவிக்கலாம். சட்ட ரீதியான பிரச்னை வராமல் பார்த்து கொள்ளலாம் என்று கூறி இணைப்பை துண்டித்தார். இது குறித்து, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு, அகிலா தகவல் தெரிவித்தார். பின், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகாரளித்தார். போலீசார் கொடுத்த அறிவுரைப்படி, அப்பெண்ணிடம் அகிலா பேசி, பி.பெ.அக்ரஹாரம் பகுதிக்கு வருமாறு அழைத்தார். அங்கு ஒரு ஆண் உள்ளிட்ட, நான்கு பெண்கள் நேற்று முன்தினம் மாலை வந்தனர். அவர்களை போலீசார் பிடித்தனர். இதில் ஒரு பெண் மட்டும் தப்பினார். கருங்கல்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை கணபதியை சேர்ந்த அருண் மனைவி இடைத்தரகர் சங்கரேஸ்வரி, 30, சேலம், களரம்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி கோகிலா, 32, அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் மனைவி மோகன பிரியா, 24, என, தெரியவந்தது. இதில், கோகிலா, மோகன பிரியா ஆகியோர், கருமுட்டையை தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு விற்பது, பச்சிளம் குழந்தைகளை வாங்கி, விற்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். இதேபோல், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார், 32, இடைத்தரகராக உள்ளது தெரியவந்தது. குழந்தைகளை விற்பனை செய்வது, குழந்தைகளை விற்பனை செய்ய முயற்சித்தல் ஆகிய இரு பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிந்து, மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை நேற்று கைது செய்தனர். பவானி, லட்சுமி நகரை சேர்ந்த சண்முகபிரியா தலைமறைவாக உள்ளார்.
போலீசார் கூறியதாவது: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இக்கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்தும், கருமுட்டை விற்பனை, குழந்தை கடத்தல், குழந்தை திருட்டு குறித்து விசாரித்து வருகிறோம். தலைமறைவாக உள்ள, சண்முகபிரியா சிக்கினால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE