சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, மத்திய, மாநில அரசுகளின் வரிகளே காரணம்,'' என, அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறினார்.
இதுகுறித்து, அவர், சேலத்தில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனாவால், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்ததால், அரபு நாடுகளில், கச்சா எண்ணெய் கொள்முதலை, பல நாடுகள் குறைத்ததால், பீப்பாய், 30 டாலராக குறைந்தது. கொரோனா தாக்கம் குறைய தொடங்கிய நிலையில், எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பால், அரபு நாடுகளில், மீண்டும் கச்சா எண்ணெய் கொள்முதலை, பிற நாடுகள் தொடங்கின. இதனால், கடந்த நவ., 20ல், கச்சா எண்ணெய், 43 டாலராக இருந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், 85.12 ரூபாய், டீசல், 76.74 ரூபாய்க்கு விற்றது. ஆனால், சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை, 30 ரூபாயாக உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகளின், கலால், வாட் வரியாக, டீசலுக்கு, 60 சதவீதம் என, 48.02 ரூபாய், பெட்ரோலுக்கு, 63 சதவீதம் என, 55.02 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில், டீலர் கமிஷன், டீசலுக்கு, 2.50 ரூபாய், பெட்ரோலுக்கு, 3.03 ரூபாய் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில், கடந்த நவ., 20 முதல், இதுவரை, 14 முறை விலை உயர்ந்து, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2.21 ரூபாய் அதிகரித்து, இன்று(நேற்று), 87.33 ரூபாய், டீசல் விலை, 3.29 ரூபாய் அதிகரித்து, 80.03 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் அடிப்படை விலை குறைவாக உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகளின் வரிகள் அதிகமாக உள்ளதால், விலை புது உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், மாதம், 5,000 கி.மீ., இயக்கப்படும் லாரிக்கு, எரிபொருள் செலவில், 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவாகிறது. சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கும்பட்சத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். அதனால், மத்திய, மாநில அரசுகள், வரியை குறைத்து, மோட்டார் தொழிலை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE