தமிழகத்தில், 'கொரோனா' பரவல் காரணமாக, நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ்கள், தற்போது வரை முழுமையாக இயக்கப்படவில்லை. அரசின் வாராந்திர வரி வசூலால் சிக்கலில் உள்ள ஆம்னி பஸ் உரிமையாளர்கள், ஜனவரியில் பஸ்களை இயக்கலாமா, என்ற யோசனையில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த பிப்., வரை, 3,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இவை தவிர, ஆம்னி பஸ்கள் என்ற பெயரில், 800க்கும் மேற்பட்ட சுற்றுலா பஸ்கள் இயங்கின. இந்த பஸ்களின் இயக்கம் கடந்த, மார்ச் 24 முதல் நிறுத்தப்பட்டன. கொரோனா ஊடரங்கு படிப்படியாக விலக்கப்பட்ட, நிலையில், நவ., முதல் வாரம் முதல், ஆம்னி பஸ்களை இயக்கி கொள்ள அரசு அனுமதி அளித்தது. ஆனால், பிரபல நிறுவனங்களின் ஆம்னி பஸ்கள் இயக்கத்துக்கு வராத நிலையில், குறைவான பஸ்களை கொண்டுள்ள நிறுவனங்கள், சுற்றுலா பஸ்கள், ஆம்னி பஸ்களாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், டிச.,5 முதல், தமிழகத்தில் அனைத்து பஸ்களிலும், 100 சதவீத இருக்கைகளுடன் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னரும், ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதற்காக அறிவிப்பு இல்லை.
இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் ஓடாத பஸ்சுக்கு காலாண்டு வரி, சாலை வரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றை செலுத்துவதில் இருந்து, எந்த விதி விலக்கும் அளிக்க வில்லை. தமிழகம் தவிர பிற மாநிலங்கள் ஆம்னி பஸ் தொழிகலை காக்கும் வகையில், தேவையான உதவிகளை வழங்கின. ஆனால், தமிழக அரசு எந்தவித சலுகை, வரி குறைப்பும் செய்யவில்லை. காலாண்டு வரி செலுத்தினால், இருக்கைக்கு மூன்று மாதத்துக்கு, 4,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், வாரம் தோறும் வரி எனில், காலாண்டுக்கு, 9,000 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி, பெர்மிட் கட்டணம் பெறுவதிலும், பல்வேறு சிக்கல்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே, பஸ்களை இயக்குவதில் தயக்கம் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இயக்கத்தில் உள்ள அரசு, தனியார் பஸ்களில் எதிர்பார்த்த அளவு பயணிகள் வருகை இல்லை. தற்போதைய சூழலில் பஸ்களை இயக்கினால், இழப்பை தான் சந்திக்க நேரிடும். பொதுமக்களின் நலன் கருதி, ஜனவரி முதல் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE