நாமக்கல்: நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில், அரசு பள்ளிகளில், குறுங்காடுகள் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு, நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. அதன் மூலம், கருமேகங்களை ஈர்த்து, மழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, மோகனூர் அடுத்த தோளூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், முதலாம் குறுங்காடுகள் திட்டம், அப்பகுதி இளைஞர்கள் மூலம் அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட குறுங்காட்டில், 700 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்போது, தேசிய பசுமைப்படை சார்பில், காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், இரண்டாம் குறுங்காடுகள் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கலைமணி, வனம் அறக்கட்டளை மூலம், 10க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் பொது இடங்களில், மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறார். அதேபோல், நாமக்கல் மாவட்டத்திலும் அமைக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக, தோளூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டது. தற்போது, இரண்டாம் குறுங்காடுகள் திட்டம், காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2,000 சதுரஅடி பரப்பில், 600 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2021, ஜன.,யில் இத்திட்டம் துவக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE