கரூர்: வெளிநாடுகளுக்கு ஏலக்காய் ஏற்றுமதி தொடங்கியுள்ள நிலையில், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும், அதன் எல்லையில் உள்ள கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. ஆடி மாதத்தில், ஏலக்காய் சீசன் துவங்கி, 40 நாட்களுக்கு ஒருமுறை, ஆறு முறை அறுவடை நடப்பது வழக்கம். அறுவடைக்கு பிறகு ஏலக்காய், இந்திய நறுமண வாரியத்தின் வழியாக, கேரளா மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம், போடியில் உள்ள ஏல மையத்தில் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், உள்நாட்டில் மட்டுமல்ல வெளி நாடுகளுக்கும் ஏலக்காயை அனுப்ப முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில், ஒரு கிலோ, 2,600 ரூபாயில் இருந்து, 1,800 ரூபாயாக சரிந்தது. தற்போது, ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால், ஊழியர்கள் பணிக்கு வர துவங்கியுள்ளனர். அறுவடையும் துவங்கியுள்ளது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை ஏலக்காய் சீசன் காலம் என்பதால், வரத்து அதிகரித்துள்ளது. மேலும், குளிர் நாடுகளுக்கு ஏலக்காய் ஏற்றுமதி சமீபத்தில் அதிகரித்துள்ளது. உடல் சூட்டை ஏற்படுத்தும், ஏலக்காய்க்கு, வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளதால், ஆர்டர்கள் கிடைத்துள்ளன. நடப்பு வாரம் போடியில் உள்ள, இந்திய நறுமண பொருட்கள் ஏல மையத்தில் ஒரே நாளில், 70 டன் ஏலக்காய் விற்பனை நடந்துள்ளது. முதல்தர ஏலக்காய், 2,000 ரூபாய்க்கு விற்றது. ஏலக்காய் ஏற்றுமதி அதிகரித்து, விலையும் அதிகரித்துள்ளதால், விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE