மும்பை: ஏழைகளுக்கு உதவுவதற்காக நடிகர் சோனு சூட், தனது 8 சொத்துகளை ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அமலானதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்தசமயத்தில், நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில், புலம்பெயர் தொழிலாளர்களை சிறப்பு பஸ், விமானங்களில் அனுப்பி உதவி செய்தார். மேலும், ரஷ்யா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தவித்த மாணவர்களையும் இந்தியாவுக்கு சொந்த செலவில் விமானங்களில் அழைத்து வந்தார். இவரின் சேவையை பலரும் பாராட்டினர்.

அதுமட்டுமல்லாமல், ஏழை பெண்களுக்கு டிராக்டர் வழங்குதல், அறுவை சிகிச்சை செய்ய கோரிக்கை வைத்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தல் உள்ளிட்ட பல உதவிகளை தன்னலம் பாராமல் செய்த சோனு சூட்டிற்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது சொத்துகளை அடமானம் வைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சோனு சூட் தனது பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகள் என 8 சொத்துக்களை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார் என்றும், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் இருந்து 10 கோடி ரூபாய் லோன் வாங்க கடந்த செப்டம்பர் 15ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி நவம்பர் 24ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE