சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் - காலத்தின் கட்டாயம்!

Added : டிச 10, 2020
Share
Advertisement
மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் உறுதியும், ஆற்றலும் பெற்ற அரசியல் சாசனத்தைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியா. 'இந்தியர்களாகிய நாம்' என்ற உணர்வு, நிறுவனங்களை வலுப்படுத்தி, 21ம் நுாற்றாண்டின் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு, போட்டி நிறைந்த உலகில், ஒரு முன்னோடி நாடாக இந்தியா திகழ, தேவையான மதிப்பீடுகளைக் கொடுத்துள்ளது. கடந்த, 2014-ல், நரேந்திர மோடி
சிந்தனைகளம், தேர்தல்,

மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் உறுதியும், ஆற்றலும் பெற்ற அரசியல் சாசனத்தைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியா. 'இந்தியர்களாகிய நாம்' என்ற உணர்வு, நிறுவனங்களை வலுப்படுத்தி, 21ம் நுாற்றாண்டின் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு, போட்டி நிறைந்த உலகில், ஒரு முன்னோடி நாடாக இந்தியா திகழ, தேவையான மதிப்பீடுகளைக் கொடுத்துள்ளது.

கடந்த, 2014-ல், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளித்ததால், 30 ஆண்டுகளுக்குப் பின், மத்தியில் தனிப் பெரும்பான்மை கொண்ட வலுவான ஆட்சி அமைந்துள்ளது. அது முதல் இந்த அரசு, 'ஜன்தன், நேரடி மானியத் திட்டம், சரக்கு- சேவை வரிகள், ஒரு பதவி; -ஒரு ஓய்வூதியம், டிஜிட்டல் இந்தியா, துாய்மை இந்தியா' உள்ளிட்ட பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.உலக வல்லரசாக மாற இன்னும் அதிக துாரம் போக வேண்டும் என்றாலும், சவால் மிகுந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், பிரதமர் விடுத்துள்ள, 'தன்னிறைவு இந்தியா' என்ற அழைப்பு, நாட்டின் வளர்ச்சிப் பாதையை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றும்.

எல்லாத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் தேர்தல் அட்டவணையை மாற்றுவது, வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான மிக முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.அரசியல் சாசனத்தின், 15-வது பகுதியின், 324 முதல், 329 வரையிலான பிரிவுகள், பார்லிமென்டிற்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியுள்ளன.

தேர்தல் சுழற்சி முறை பாதிப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பொறுப்பு, மாநில தேர்தல் ஆணையங்களைச் சேர்ந்ததாகும். அரசியல் சட்டம் வகுத்துள்ள இந்த முறையால், ஆண்டு முழுதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில், தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகி, வளர்ச்சித் திட்டங்களையும், நலத் திட்டங்களையும் செயல்படுத்துவது பாதிக்கப்படுகிறது; நிர்வாகத்திற்கு பணிச்சுமை கூடுவதோடு, அரசின் கொள்கைகளை செயல்படுத்த முடியாத முடக்க நிலையும் ஏற்படுகிறது.மேலும் இதனால், அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கூடுதல் செலவும் ஏற்படுகிறது. காவல் துறை, துணை ராணுவம் ஆகியவை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதிலும், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதிலும் சுணக்கம் ஏற்படுகிறது.

கடந்த, 1967 வரை, லோக்சபாவுக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதற்குப் பின், அரசியல் சாசனத்தின், 356-வது பிரிவு பாரபட்சமாகவும், கண்மூடித்தனமாகவும் பயன்படுத்தப்பட்டதால், தேர்தல் சுழற்சி முறை பாதிக்கப்பட்டது. மேலும், நிலையற்ற கூட்டணி ஆட்சிகளால், லோக்சபாவும், ஏழு முறை உரிய காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1949 ஜூன், 15ல், அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் ஷிப்பன்லால் சக்சேனா, தேர்தல் முறையைத் திருத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். அமெரிக்காவில் இருப்பதைப் போல, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தேர்தல் என்ற நிலை இங்கு இல்லாததால், அடுத்த, 10, 12 ஆண்டுகளில், எந்த நேரமும் நாட்டின் ஏதாவதொரு பகுதியில் தேர்தலை நடத்திக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையை, முதன் முறையாக, தன், 1983ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்தது; அதன் பிறகும் பலமுறை அதை வலியுறுத்தி வந்துள்ளது. இந்திய சட்ட ஆணையம், 1999ல் வெளியிட்ட தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான அதன், 170வது அறிக்கையில், நிர்வாக ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய, மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியது.

சட்டம் மற்றும் நீதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவும், லோக்சபாவுக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றிய அறிக்கையை, 2015 டிசம்பர் மாதத்தில் சமர்ப்பித்தது. கடந்த, 2017- பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 'இது குறித்து ஆக்கபூர்வமான விவாதம் அவசியம்' என, வலியுறுத்தினார். நடப்பு, 17-வது லோக்சபா தேர்தலுக்கு முன், 2018 ஆகஸ்டில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த தன் வரைவு அறிக்கையை வெளியிட்டது, இந்திய சட்ட ஆணையம்.


தேசிய தலைவர்களின் கூட்டம்


அதுபோல, 2019 ஜூன், 19-ல், ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் இடம் பெற்றுள்ள, அனைத்து அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
அண்மையில், 2020 அரசியல் சாசன தினத்தையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற, 80வது அகில இந்திய அவைத் தலைவர்களின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், ஒரே வாக்காளர் பட்டியல், பல்வேறு நிர்வாக அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்தத் திசையில் முதல் நடவடிக்கையாக, அனைத்து தேர்தல்களுக்குமான ஒரே வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது பற்றி பரிசீலிக்கலாம். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு, பல்வேறு மாநிலங்களில் தேர்தல் அட்டவணையை ஒத்தி வைப்பதும், சில மாநிலங்களில் சட்டசபைகளை முன்கூட்டியே கலைப்பதும் அவசியமாகும். உரிய அரசியல் சாசன நடவடிக்கைகள், ஒருமித்த கருத்தின் அடிப்படையில், லோக்சபா தேர்தலை ஒட்டியோ, சற்று முன்பாகவோ அல்லது பிறகோ, மாநில சட்டசபைகளின் தேர்தலை நடத்தலாம்.

எஞ்சிய மாநிலங்களில், சட்டசபைகளின் ஆயுளை, அரசியல் சாசனப்படி சீர் செய்வதன் மூலம், அடுத்த மக்களவைத் தேர்தலை, அனைத்து மாநில சட்டசபைத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தலாம். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முறையில் மாற்றம் செய்து, மாற்று அரசு அமைக்கும் நம்பிக்கை தீர்மானத்தையும் நிறைவேற்றினால் மட்டுமே, பதவியில் உள்ள அரசை அகற்ற முடியும் என்று திருத்தலாம். இது போன்ற தீர்மானங்களை லோக்சபாவின் அல்லது சட்டசபையின் ஆயுட்காலத்திற்குள் எத்தனை முறை கொண்டு வரலாம் என்பது பற்றிய எண்ணிக்கையை முறைப்படுத்தலாம். தொங்கு பார்லிமென்ட் அல்லது சட்டசபை ஏற்படும் பட்சத்தில், தேர்தலுக்கு முந்தைய அல்லது பிந்தைய கூட்டணியை சுமுகமான முறையில் ஏற்படுத்தி, அரசு அமைக்கும் வாய்ப்பை தனிப்பெரும் கட்சிக்கே வழங்கலாம்.

ஆட்சி அமைக்க இயலாத நிலையில், இடைக்காலத் தேர்தலை, முழு ஐந்து ஆண்டுகளுக்கு அல்லாமல், எஞ்சிய காலத்திற்கு மட்டும் நடத்தலாம். தற்போது உள்ள தேர்தல் சட்டத்தின் ஓட்டைகளை அகற்ற, அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய, மாநில சட்டம் இயற்றும் மன்றங்களுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் இதர ஜனநாயக நாடுகளின் உதாரணத்தை, இந்தியா பின்பற்றலாம். அதற்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் தேர்தல் நடத்தும் முறை, ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் நடைமுறையில் உள்ளது. பிரிட்டனில், வரையறுக்கப்பட்ட கால பார்லிமென்ட் சட்டம், 2011 முதல் அமலில் உள்ளது. அமெரிக்காவில் பல்வேறு பதவிகளுக்கு, ஒரே ஓட்டுச் சீட்டு நடைமுறை உள்ளது. தேசிய அவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பிராந்திய சட்டசபைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தேர்தல் நடத்தும் நடைமுறை தென் ஆப்ரிக்காவில் செயல்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகளாகும்.

ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறை, இந்தியாவின் அனைவருக்குமான வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். செலவுகளைக் கட்டுப்படுத்தி, மக்கள் பணத்தை பாதுகாக்க வகை செய்யும். அரசின் கொள்கைகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் உரிய நேரத்தில் செயல்படுத்துவதால், நிர்வாகச் சுமை குறையும். அத்தியாவசிய சேவைகளை தொய்வு இல்லாமல் வழங்குவதால், மக்களுக்கு பயன் கிடைப்பதுடன், எப்போதும் தேர்தல் மனநிலையிலேயே இருப்பதிலிருந்து விடுபட்டு, திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசுக்கு உதவும்.இந்த சீர்திருத்த நடவடிக்கை, தேர்தல் ஆணையத்தின் செலவுகளை மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் செலவுகளையும் வெகுவாகக் குறைக்கும்.இத்தகைய திட்டமிட்ட, ஒருங்கிணைந்த வழிமுறைகளில், சட்டங்களுக்கு முன்பாகவும், அதற்குப் பிறகும் ஏற்படும் தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஆழமாக மதிப்பிடும் கட்டமைப்பை முன்மொழியலாம்.

சட்டத்தின் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக விளைவுகளை மதிப்பிடுவதற்கான கூறுகளையும் உள்ளடக்கலாம். கடந்த காலங்களில் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் பயனாக, நாடு பெருமை மிகுந்த ஜனநாயக அமைப்பாகத் திகழ்கிறது. இந்த உத்தேச தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மக்களின் அனுமதியைப் பெறுமானால், நாட்டின் வளர்ச்சிக்கும், வளர்ச்சி திட்டங்களுக்கும் பெரும் உத்வேகமாக அமைவதுடன், ஜனநாயகமும் மேலும் வலுப்படும்.


காலத்தின் கட்டாயம்


நடப்பு, 21-ம் நுாற்றாண்டில் உலகின் முன்னணி நாடாகவும், உலகின் மிகப் பெரும் சக்தியாகவும் இந்தியா உருவெடுக்கும் நிலையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் என்னும் சீர்திருத்தம், இன்றைய காலத்தின் கட்டாயம் என நம்புகிறேன். அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இந்த பெருமை மிகு, துடிப்பான ஜனநாயகத்தின் அனைத்து பிரிவினரும் ஒன்றுபட்டு, சிந்தித்து, ஆலோசித்து, விவாதித்து, மிக முக்கியமான இந்த சீர்திருத்த நடவடிக்கைக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என, நான் அழைப்பு விடுக்கிறேன். இந்திய சமுதாயத்தின் பரந்த, நலன் சார்ந்த இலக்குகளை எட்டுவதில் நமக்கு உள்ள பங்கு, பொறுப்பு ஆகியவை பற்றி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அர்ஜுன்ராம் மெக்வால்
மத்திய இணையமைச்சர் - பார்லிமென்ட் விவகாரம், கனரகத் தொழில் மற்றும் பொதுத் துறை

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X