புதுடில்லி: வேளாண் சட்டத்தை திருத்த ஒப்பு கொண்டதாகவும், ஆனால், விவசாயிகள் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு முழு நன்மையை வழங்கக்கூடியது. தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற நிலை உள்ளது.
வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்து அறிக்கையை விவசாயிகளிடம் அனுப்பினோம். ஆனால், சட்டத்தை நீக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேறு எந்த தீர்வையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த சட்டங்கள் தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனை குறித்து ஆலோசிக்க திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம். இந்த சட்டத்தால், குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் விவசாய மண்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பேச்சுவார்த்தையின் போது, விவசாயம் மாநில அரசின் பட்டியலில் வருகிறது. மத்திய அரசு சட்டம் இயற்ற முடியாது என பலர் தெரிவித்தனர். வர்த்தகம் குறித்து மத்திய அரசால் சட்டம் இயற்ற முடியும் என்பதை தெளிவாக அவர்களிடம் எடுத்து கூறினோம். இந்த சட்டத்தால், குறைந்த பட்ச ஆதார விலைக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.

குறைந்தபட்ச ஆதாரவிலை, மண்டி ஆகியவற்றிற்கு வேளாண் சட்டங்கள் பாதிப்பு ஏற்படுத்தும் என விவசாயிகள் நினைக்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை, மண்டி ஆகியவை தொடரும் என உறுதியளித்தோம். புதிய சட்டப்படி, விவசாய பொருட்களை கொள்முதல் செய்வோர் பான்கார்டு வைத்திருப்பது அவசியம். விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகலாம். தனியார் வர்த்தகர்கள் பதிவு செய்வது கட்டாயம், பதிவு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிலத்தை தொழிலதிபர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் என புரிந்து கொண்டுள்ளனர். குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், கர்நாடகாவில் நீண்ட நாட்களாக ஒப்பந்த விவசாய முறை உள்ளது. அங்கு எந்த பிரச்னையும் இல்லை. புதிய சட்டத்தில் கூட, விவசாயிகளின் நிலம் மீதான ஒப்பந்தம் குறித்து எந்த ஷரத்துகளும் இல்லை.
2006 ல் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நாடு பார்த்துள்ளது. அந்த குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலையானது, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களின் விலையை விட 1.5 மடங்கு அதிகம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.விவசாயிகளின் நலனே எங்களின் முக்கியத்துவம், மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் ஆலோசிக்க வேண்டும்.குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என நாங்களும் உறுதியளிக்கிறோம். சிறிய விவசாயிவிவசாயிகள் தங்களது விலை பொருட்களை யாரிடமும் விற்கலாம் என்ற நிலை உள்ளது.முதலீட்டுடன் தயாராக உள்ள சிறிய விவசாயிகளுக்கு இந்த மசோதா உதவும்.
கொள்முதல் செய்பவரும், விவசாயியும் ஒப்பந்தம் போட்டு, நிலத்தில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம். ஒப்பந்தம் முடிந்தவுடன் உள்கட்டமைப்புகளை அமைத்தவர் அகற்ற வேண்டும். தவறினால், அந்த உள்கட்டமைப்புக்கு, புதிய சட்டப்படி விவசாயி உரிமையாளர் ஆவார். விவசாயிகளுடன் பேசுவதற்கு, நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.மத்திய அரசின் பரிந்துரைகளை ஆலோசிக்க விரும்பினால், அவர்கள் எங்களை அணுகலாம். ஆலோசனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். விவசாயிகளை பாதிக்கும் அம்சம் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE