பீஜிங் : 'எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளப்பதில் நேபாளத்துடன் இணைந்து செயல்பட்டது அந்நாட்டுடனான நல்லுறவில் மேலும் ஒரு மைல் கல்' என சீனா தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உயரம் 8778 மீட்டர் என 1847ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் அறிவித்தனர். சீனா மற்றும் நேபாள எல்லையின் நடுவே எவரெஸ்ட் அமைந்துள்ளதால் இரு நாடுகளின் வழியே மலையேறலாம்.இச்சிகரம் நேபாளத்தில்'சாகர்மாதா' என்றும் சீனாவில் 'குவாலங்மா' எனவும் அழைக்கப்படுகிறது. கடந்த 2018ல் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் நேபாளம் தெரிவித்ததை விட நான்கு மீட்டர் குறைவாக உள்ளதாக சீனா அறிவித்தது. இதில் நேபாளத்திற்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து மலை மீது மூடியுள்ள பனிப் பகுதியை சேர்த்து நேபாளம் எவரெஸ்ட் சிகரத்தை அளந்தது. ஆனால் சீனா பனிப் பகுதி நீங்கலாக மலையின் உச்சத்தை மட்டும் அளவெடுத்தது.
இந்நிலையில் நேபாளம்-சீனா இணைந்து எவரெஸ்ட் சிகரத்தை அளக்கும் பணியை மேற்கொண்டன. இதையடுத்து 'எவரெஸ்ட் சிகரம் 86 செ.மீ. அதிகரித்து 8848.86 மீட்டராக உயர்ந்துள்ளது' என நேபாளம்-சீனா இணைந்து நேற்று முன்தினம் கூட்டறிக்கை வெளியிட்டன.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:நேபாளம்-சீனா இடையே துாதரக உறவு ஏற்பட்டு 65 ஆண்டுகளாகின்றன. இத்தகைய சூழலில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பான கருத்து வேறுபாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் போல இரு நாடுகளின் கூட்டுறவு உச்சத்தை எட்டியுள்ளது. இது நேபாளம்-சீனா இடையிலான நல்லுறவின் ஒரு மைல்கல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE