'அறிவுஜீவிகளுக்கிடையே, 'ஈகோ கிளாஷ்' வந்து விடப் போகிறது... பார்த்துக் கொள்ளுங்கள்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் கமல் கட்சியில் இணைந்துள்ள, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ் பாபு பேட்டி: கமல் கட்சியின் சிந்தனையும், என் சிந்தனையும் ஒன்று போல இருக்கிறது. இந்த கட்சிக்கு வர, எனக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை; நானும் கேட்கவில்லை. அவர்கள் தான் என்னை அழைத்தனர். அதனால் தான், எத்தனையோ கட்சிகள் இருக்கும் போது, கமல் கட்சியில் சேர்ந்தேன்.
'காங்., ஆட்சியின் போது தான் ராஜா, கைது செய்யப்பட்டார். ஆனால், அவர், ஜெ., மீதும், மோடி மீதும் தான் கோபத்தை காண்பிக்கிறார்...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை: தி.மு.க.,வை சேர்ந்த ஆ. ராஜா, டில்லி திஹார் சிறையில் வாடி வதங்கி, மண்டியிட்டு, மன்றாடி, மடிப்பிச்சை கேட்டவர். காங்கிரஸ்காரர்களாலேயே குற்றம் சாட்டப்பட்டவர். இப்போது, அதே காங்கிரசுடன், கூட்டணி வைத்திருக்கிறது, ராஜாவின் தி.மு.க.,
'கட்சி அறிவிப்போடு நிறுத்தி விடுவார்; படங்களில் நடிக்க சென்று விடுவார் என்பது போலல்லவா, நீங்கள் சொல்வது இருக்கிறது...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேட்டி: ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். யார், புதியதாக செயல் திட்டங்களை வகுத்து வந்தாலும் அதை வரவேற்பது தமிழர் பண்பாடு. அவர் கட்சி துவங்கட்டும். அதன் பின், என் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன்.
'பாதகம் இல்லை என நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பா.ஜ., 'முடிவு' உங்களுக்கு தெரிந்து விட்டதோ...' என, சந்தேகத்தை கிளப்பும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி: அர்ஜுன்மூர்த்தி புதிதாக, பா.ஜ.,வில் இணைந்தவர். தற்போது அவர் ரஜினியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை, ரஜினி ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பதாக கூறுகிறார். யார் எந்த கட்சி ஆரம்பித்தாலும், பா.ஜ.,விற்கு பாதகம் கிடையாது.
'தலைகீழாக நின்றாலும், ஹிந்துக்கள் ஒற்றுமையாக ஓட்டளிக்க மாட்டார்கள் என்கின்றனரே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி: பா.ஜ., மாநில தலைவர் முருகனின், வேல் யாத்திரை, தமிழகத்தில் பெரியளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சென்ற முருகனின் படை வீடுகளில், ஹிந்துக்கள் எழுச்சியுடன் பங்கேற்று, பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே, வரும் தேர்தலில் அவர்கள், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பர்.
'இது, கம்யூ.,க்களால் துாண்டி விடப்படும் போராட்டம் என, ஆளும் தரப்பில் கூறப்படுவது, உங்களுக்கு கேட்கவில்லையா...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா பேட்டி: விவசாய சட்டங்களை, பார்லிமென்டில் நிறைவேற்றும் முன், மாநில அரசுகளை, மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. இது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதனால் தான், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள், இந்த சட்டங்களை எதிர்க்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE