சாலை விதிகளை மீறுவோர், இனி தப்பவே முடியாத அளவுக்கு நகர் முழுவதும் கேமராக்கள் வாயிலாக, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் சாலை விதிகளை மதிக்காமல் சென்றவர்கள், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.20 கோடி அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள, 76 சிக்னல்களிலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது.
ட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, விதி மீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன.தற்போது இந்த சிசிடிவி கேமராக்களை, என்.ஐ.சி., (nic) எனப்படும் தேசிய தகவல் மையத்தின் இணையத்துடன், இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள வாகனங்களின் பதிவு விபரங்கள் அனைத்தும், ஏற்கனவே என்.ஐ.சி.,உடன் இணைக்கப்பட்டுள்ளன.இதனால், என்.ஐ.சி.யுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகும் விதிமீறல், சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஆர்.சி.புத்தகத்தில்தானாகவே பதிவாகி விடும். வாகனத்தின் விதிமீறலுக்குரிய அபராதமும், அதில் பதிவு செய்யப்பட்டு விடும்.
எந்தவிதமான விதிமீறல், அது சார்ந்த புகைப்படம், அதற்கான அபராதம் எவ்வளவு என்பது போன்ற விபரங்கள், அந்த வாகனத்தின் பதிவு எண்ணுக்குரிய, ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்குச் சென்று விடும்.அந்த வாகனம், எப்.சி., அல்லது ஆர்.சி.புக் பெயர் மாற்றம் போன்றவற்றுக்காக, ஆர்.டி.ஓ.,அலுவலகத்துக்குச் செல்லும்போது, விதிமீறல்களுக்கான அனைத்து அபராதத்தையும் செலுத்த வேண்டும்
.'கிளிக்' செய்தால் தெரியும்!
ஒருவேளை வாகன உரிமையாளர்கள், தங்களுடைய மொபைல் போன் எண்ணை, ஆர்.டி.ஓ., ஆபீசில் பதிவு செய்து வைத்திருந்தால், என்.ஐ.சி.,யில் பதிவாகும் விதிமீறல் குறித்த எஸ்.எம்.எஸ்., உடனே வந்து விடும். அதிலுள்ள லிங்க்கை 'க்ளிக்' செய்தால், விதிமீறல் செய்த புகைப்படம், அபராதத்தொகை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பார்த்துக் கொள்ளலாம்.கோவை மாநகரில் இப்போது என்.ஐ.சி.யுடன் இணைக்கப்பட்டுள்ள, 20 சந்திப்பு சிக்னல்களில் ஒரு நாளுக்கு பல ஆயிரம் விதிமீறல்கள் பதிவாகின்றன.
ரூ.20 கோடி அபராதம்!
கடந்த ஜனவரியிலிருந்து, சென்ற மாதம் வரையிலுமாக நடந்துள்ள விதிமீறல்களுக்குக் கணக்கிடப்பட்டுள்ள அபராதத்தொகை, ரூ.20 கோடியை எட்டியுள்ளது.இவர்களில் எப்.சி., ஆர்.சி.,புக் பெயர் மாற்றம் போன்றவற்றுக்காக, ஆர்.டி.ஓ., ஆபீஸ் சென்றவர்கள் மட்டுமே கடந்த ஜனவரியிலிருந்து, இதுவரை மூன்றரை கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஒரு சில வாகனங்களுக்கு 10 ஆயிரம், 12 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.எனவே, கோவை நகருக்குள் இனிமேல் சிக்னலை மதிக்காமல் சென்றால், என்றைக்கிருந்தாலும் அபராதம் கட்டியே தீரவேண்டும்.எல்லோருமே சாலை விதிகளை மதித்தால், அபராதமும் கட்டத்தேவையில்லை; விபத்து அபாயமும் இல்லை!
எஸ்.எம்.எஸ்., பாருங்க!
கோவை போக்குவரத்துப் பிரிவு உதவி கமிஷனர் ராஜ்கண்ணா கூறுகையில், ''வாகனம் வைத்திருப்பவர்கள் எல்லோரும், தங்களுடைய ஆர்.சி.புத்தகத்தில் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்து கொள்வது அவசியம். ஏற்கனவே பதிவு செய்திருந்தால், வாகனத்தின் விதிமீறல் குறித்த எஸ்.எம்.எஸ்., வரும். பலரும் அதைப் பார்த்து விட்டு அழித்து விடுகின்றனர். அல்லது கண்டுகொள்வதில்லை.செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கினாலும், விற்றாலும் ஆர்.டி.ஓ.,ஆபீசில் பெயர் மாற்றம் செய்து கொள்வது கட்டாயம்.
மத்திய அரசின், MParivahan என்கிற ஆப்-ஐ டவுண்லோடு செய்து கொண்டால், நம் பெயரில் உள்ள வாகனத்தின் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஆர்.சி.புக், லைசென்ஸ் போன்றவற்றை, டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்,'' என்றார்.எஸ்.எம்.எஸ்., தகவல், ஆங்கிலத்தில் இருப்பதால், பலர் ஏதோ ஒரு விளம்பரம் என நினைத்து அழித்து விடுகின்றனர். பலருக்கு புரிவதுமில்லை. எனவே, அந்தந்த மாநில மொழிகளிலும், இந்த குறுஞ்செய்திகளை அனுப்ப ஏற்பாடு செய்தால், மக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும்- நமது நிருபர்-.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE