ஓட்டம் பிடிக்கும் தொண்டர்கள்!
'எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், வாரிசு அரசியலை தடுக்க முடியாது போலிருக்கிறதே...' என, திரிணமுல் காங்கிரசின் இளைஞர் அணி தலைவர் அபிஷேக் பானர்ஜி குறித்து, எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும், 'ஆஹா ஓஹோ'வென, அவரை எல்லாரும் புகழ்ந்து தள்ளினர். 'எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல் சாதித்து காட்டி விட்டார். இந்த கட்சியில் வாரிசுக்கு வேலையில்லை' என்றனர். ஆனால், சில ஆண்டுகளிலேயே, தன் உறவினரான அபிஷேக் பானர்ஜியை, கட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைத்தார் மம்தா. லோக்சபா எம்.பி., கட்சியின் இளைஞர் அணி தலைவர் என, மிகப் பெரிய பொறுப்புகள், அபிஷேக் பானர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது, கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும், அபிஷேக் கட்டுப்
பாட்டில் வந்து விட்டது. அடுத்த சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகளை மதிக்காமலும், ஆலோசனை கேட்காமலும், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து, அபிஷேக், தன் இஷ்டத்துக்கு முடிவெடுப்பதாக புகார்கள் குவிகின்றன. 'இன்னும் சில ஆண்டுகளில், அபிஷேக்கை தவிர, கட்சியில் யாருமே இருக்க மாட்டார்கள். தொண்டர்கள், வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து விடுவர்' என புலம்புகின்றனர், திரிணமுல் நிர்வாகிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE