தனி வழியில் பயணிக்கட்டும் ரஜினி!
பா.விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழகம் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களைக் கண்டிருக்கிறது. அதில் பலரும் அரசுக் கட்டிலை அலங்கரிக்க முயன்றாலும், ஒரு சிலருக்கே அந்தப் பாக்கியம் கிடைத்து, அரியணை ஏறினர்.நீண்ட இழுபறிக்குப் பின், நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்க முடிவு செய்துள்ளார். சிறுவர் முதல் முதியோர் வரை, அனைவராலும் ரசிக்கக் கூடியவர் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. அது தான், அவரின் மிகப்பெரும் பலம்.
நேர்மையான வழியில் தான், அவர் சம்பாதித்து வருகிறார். விளம்பரம் இன்றி, ஏழை, எளியோர் பலருக்கு உதவி செய்துள்ளார். சினிமாவில், 'மேக்கப்' உடன் நடித்தாலும், நிஜத்தில் அவர் இயல்பான தோற்றத்தில் தான் காணப்படுகிறார். அவரின் எளிமையை, அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர் என்பதால், நேர்மையாளராக மதிக்கப்படுகிறார். அதனால் தான், அவர் கட்சி ஆரம்பிக்கிறார் என்றதும், நடுநிலையாளர் அனைவரும் திருப்தி அடைந்தனர். அவரின் அரசியல் வருகையை வரவேற்கின்றனர்.'நான் முதல்வர் வேட்பாளர் இல்லை' என அறிவித்திருப்பதன் மூலம், பலரின் விமர்சனங்களுக்கு பதில் அளித்து, அவர்களின் வாயை மூடிவிட்டார்.ரஜினியின் அரசியல் வருகை, பல கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இப்போதே, 'துண்டு' போட்டு விட்டார்.
பத்து ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை சுவைக்க முடியாத, தி.மு.க.,வும் கலக்கத்தில் உள்ளது.இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும், மக்கள் வேதனையை அனுபவித்து உள்ளனர். எனவே ரஜினி, ஆளும் அல்லது ஆண்ட கட்சியுடனும் கூட்டணி வைக்கக் கூடாது.அக்கட்சிகளின் அராஜகங்களை, மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாகத் தான், ரஜினியின் வருகையை மக்கள் பார்க்கின்றனர்.'என் வழி, தனி வழி' என்பது போல, வரும் சட்டசபைத் தேர்தலில், தனித்தே நின்று சாதிக்க வேண்டும். கூட்டணி அமைத்தால், பத்தோடு பதினொன்று என, கணக்கில் அடங்கி விடுவார்.
வாக்காளர் கையில் மாற்றம்!
ஆர்.கிருஷ்ணசுவாமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ரஷ்யாவில், ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மை வீழ்ந்தது குறித்து, 'புயல் காற்றுச் சூறை தன்னில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே' என, பாரதியார் பரவசப்படுவார். தமிழகத்தில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.இருப்பினும், வரும் சட்டசபை தேர்தல் முடிவு, சில கட்சிகளுக்கு அதிர்ச்சி தரலாம்; மூடுவிழா நடத்தப்படலாம்.இரு திராவிட கழகங்களும், இந்த முறை, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அள்ளித் தராது; கிள்ளித் தான் தரும்.தமிழகத்தை பொறுத்தவரையில், வேல் யாத்திரையை மேற்கொண்டு, பா.ஜ., வளர்ந்து வருகிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.மறுபுறம், ஆன்மிக அரசியல் என, நடிகர் ரஜினியும் களமிறங்கி உள்ளார். இவருக்கு உள்ள செல்வாக்கு, ஓட்டாக மாறினால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்.பா.ஜ., மற்றும் ரஜினிக்கு, மக்கள் ஆதரவளிப்பதன் மூலம், மத வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.புதியவருக்கு அரசியல் அனுபவம் போதாது என்ற சித்தாந்தம், இன்றைய காலகட்டத்தில் எடுபடாது. ஏனெனில், இரு பெரிய தேசிய கட்சிகளான, பா.ஜ., மற்றும் காங்கிரசை தோற்கடித்து தான், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியில் ஆட்சி அமைத்தார்.அரசியலுக்கு தேவை மதி நுட்பமும், திறமையும், நேர்மையும் உள்ள தலைவரே. வரும் தேர்தலில், மக்கள் தீர்க்கமாக சிந்தித்து, சரியான முடிவு எடுக்க வேண்டும்.அரசியல் மாற்றம் வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது, வாக்காளர்களே!
நடராஜனை காப்பாற்றணும்!
சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது, தவறான நடைமுறை என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.கிரிக்கெட்டை விட, சிறந்த விளையாட்டுகள் பல உள்ளன. மற்ற விளையாட்டிற்கு, மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.சமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று உள்ளார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவர், தற்போது நடந்து வரும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் பங்காற்றி வருகிறார்.கிரிக்கெட் என்றாலே ரன் அடிப்பதும், விக்கெட் வீழ்த்துவதும் தான். ஒரு பந்து வீச்சாளர் விக்கெட் வீழ்த்தும்போது, பாராட்டுகள் வரும்.ஆனால் நடராஜன், விக்கெட் வீழ்த்தும்போது மட்டும், ஏதோ அவர், இந்நாட்டிற்காக எல்லையில் நின்று, எதிரிகளை துவம்சம் செய்தது போல, தமிழகத்தில் சிலர், 'பில்டப்' கொடுக்கின்றனர்.சமூக வலைதளங்களில், அவரை ஏகத்துக்கும் புகழ்வது, அதிருப்தியை தருகிறது. இது போதாது என, அரசியல் தலைவர்கள், தங்கள் பங்கிற்கு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.நடராஜன், சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவது, பாராட்டத்தக்கது தான். அதற்காக, இவர்கள் செய்வது, ஜீரணிக்க முடியவில்லை.இதை விட கொடுமையானது என்னவென்றால், ஜாதியின் பிடியில் இருந்த கிரிக்கெட்டை, நடராஜன் மீட்டு விட்டார் என்ற ரீதியில் வெளிவரும் விமர்சனங்கள்.எந்த விஷயத்தையும், சாதனையாளரையும் ஜாதி, மத, மொழி அடையாளத்திற்குள் சுருக்கவில்லை என்றால், பலருக்கு துாக்கம் வராது போல.கிரிக்கெட் விளையாட்டில் வளர்ந்து வரும் நடராஜனை, எதையாவது சொல்லி காலி செய்யாமல் இருப்போம். அதுவே அவருக்கு செய்யும் நல்லது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE