'கட்டிங்' பிரச்னையால் கஷ்டப்படும் மாற்றுத் திறனாளிகள்!
''அரசு வாகனத்தை சும்மாவே நிப்பாட்டி வச்சிருக்காவ வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''வருவாய் துறையில தான்... சென்னை, மாம்பலம், மதுரவாயல் தாலுகா அலுவலகங்கள்ல, தனி தாசில்தார்களுக்கு, அரசு சார்புல, பொலீரோ கார் குடுத்திருக்காவ வே...
''ஆனா, இந்த கார்களை, 10 மாசத்துக்கும் மேலா, தாலுகா அலுவலகங்கள்ல, சும்மாவே நிப்பாட்டி வச்சிருக்காவ... தனி தாசில்தார்கள், தங்கள் வாகனங்கள்ல, வந்துட்டு போறாவ வே...
''காரை குடுத்த அரசாங்கம், டீசல் தரலையா அல்லது டிரைவரை நியமிக்கலையான்னு தெரியலை... 'இப்படி ஒரே இடத்துல நிறுத்தி வச்சா, துருப்பிடிச்சு நாளைக்கு காயலான் கடைக்கு போடக்கூட லாயக்கில்லாம போயிடும்'னு, தாலுகா அலுவலக ஊழியர்கள் கவலைப்படுதாவ வே...'' என்றார்,
அண்ணாச்சி.
''உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, ஒன்றியச் செயலரை மாத்திட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்குள் நுழைந்தார், அந்தோணிசாமி.
''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், இலத்துார் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரா, தணிகாசலம்னு ஒருத்தரை, தி.மு.க., மாநில நிர்வாகியின் உதவியாளர் பரிந்துரையில நியமிச்சிட்டாங்க...
''இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, அவரை மாத்தியே ஆகணும்னு, 300க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், அறிவாலயம் வளாகத்துல, உள்ளிருப்பு போராட்டத்துல இறங்கிட்டாங்க...
''அதிர்ச்சியான பொதுச் செயலர் துரைமுருகன், தணிகாசலத்தை துாக்கிட்டு, செய்யூரைச் சேர்ந்த எம்.எஸ்.பாபுவை புதிய ஒன்றியச் செயலரா நியமிச்சார்... குளறுபடிக்கு காரணமான, மாநில நிர்வாகியின் உதவியாளரை, 'அறிவாலயம் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது'ன்னு, எச்சரிக்கை பண்ணி துரத்தி விட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நேத்து, 'டிவி'யில, பாக்யராஜ் நடிச்ச முந்தானை முடிச்சு போட்டானே... பார்த்தீயளா வே...'' என, அண்ணாச்சி கேட்க, நண்பர்கள் உதட்டை பிதுக்கினர்.உடனே, ''கட்டிங் விவகாரத்தால,
வாகனங்கள் கிடைக்காம தவிக்கிறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்புல, இலவசமா, 'ஸ்கூட்டி பெப்' மூணு சக்கர வாகனத்தை வழங்குறாங்க... இந்த வாகனத்துக்கு, அரசாங்கம் குறைவான விலை தர்றதால, டீலர்களுக்கு ஒரு வண்டிக்கு, 2,000 ரூபாய் தான் நிறுவனம் தருது பா...
''இதுல, வாகனத்தை, 'அசெம்பிள்' பண்ணவே, 1,000 ரூபாய் ஆகுது... வாகனத்தை எடுத்துட்டு போய், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்ல பதிவு செய்து, மாற்றுத் திறனாளிகள் வீடுகள்ல, 'டெலிவரி' பண்ண, 1,000 ரூபாய் ஆகுது பா...
''ஆனா, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்ல, '2,500 ரூபாய் லஞ்சம் தந்தா தான், பதிவு பண்ணுவோம்'னு கறாரா கேட்கிறாங்க... இதனால, டீலர்கள் தரப்புல, வாகனத்தை பதிவு பண்ணவே
எடுத்துட்டு போகாம வச்சிருக்காங்க...
''இந்த கட்டிங் பிரச்னையால, மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் கிடைக்கிறது தாமதமாகுது பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE