ராமநாதபுரம் : தொண்டி அருகேயுள்ள காரங்காடு அலையாத்தி காடுகள் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தொண்டி அருகே உள்ள காரங்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்புநில அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கடல்பசு, கடல்குதிரை, கடல்பாசி உள்ளிட்ட கடல்சார் வன உயிரினங்கள் வாழ்கின்றன. சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் நோக்கில் வனத்துறை ஒருங்கிணைப்போடுகாரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு சதுப்பு நிலக்காட்டின் அழகை ரசிக்கும் வகையில்3 கி.மீ., துடுப்பு படகு சவாரி மற்றும் ஸ்நார்கிங் எனப்படும் தண்ணீருக்கு அடியிலுள்ள உயிரினங்களை கண்டுகளிப்பது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
இப்பகுதியில் நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் வந்திடும் வகையில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து கலெக்டர் ஆர்.எஸ்.மங்கலத்தில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். உதவி வனப் பாதுகாவலர் கணேசலிங்கம், வனரேஞ்சர் சதீஷ் அரசு அலுவலர்கள்உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE