ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடி கண்மாயில் இருந்து உபரிநீர் வெளியேறும் மதகு( தெத்து) அளவை அதிகரிக்க வலியுறுத்தி கிராமத்தினர் உபரி நீர் வெளியேறும் மதகில் மணல் மூடைகளை அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் சோழந்துார் அருகே சீனாங்குடி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீர் மூலம் சீனாங்குடி கிராம விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழைக்கு கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறும் மதகு வழியாக தண்ணீர் கடலுக்கு சென்று வருகிறது. இந்நிலையில் சீனாங்குடி கிராமத்தினர் கண்மாயில் இருந்து உபரிநீர் வெளியேறும் மதகு தாழ்வாக கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் கண்மாயில் தண்ணீர் குறைந்தளவே தேங்கும் நிலை உள்ளதாகவும் கூறி, வீணாக கடலுக்கு சென்ற தண்ணீரை மணல் மூடைகளை வைத்து தடுத்து தண்ணீரை சேமித்தனர்.
இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்ற கிராமபகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி மணல் மூடைகளை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கிராமத்தினர் மணல் மூடைகளை அடுக்கி கண்மாயில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் மண்டல துணை தாசில்தார் கார்த்திகேயன், வீ.ஏ.ஓ., போஸ் கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வீணாக கடலுக்கு செல்லும் நீரை மற்ற கிராமத்தினருக்கு பாதிப்பு இல்லாத வகையில் தடுத்து பயன்படுத்தி கொள்வதாகவும், உபரி நீர் மதகின் அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் கிராமத்தினர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE