கர்னுால்:ஆந்திராவின் கர்னுாலில், துங்கபத்ரா நதியில் கலக்கும் மருத்துவ மற்றும் உலோக கழிவுகளால், நோய் பாதிப்புகள் ஏற்படலாம் என, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில், சமீபத்தில் காரீயம், நிக்கல் கலந்த குடிநீரால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த தகவல் அறிந்த கர்னுாலில் வசிக்கும் மக்கள், மாநகராட்சி தரப்பில் வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நகரில் ஹண்ட்ரி மற்றும் துங்கபத்ரா நதிகள் பாய்கின்றன. நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், நாள்தோறும், 6 கோடி லிட்டர் கழிவு நீர், துங்கபத்ரா நதியில் கலக்கிறது. ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவுகள், காரீயம் போன்ற உலோகம் மற்றும் மருத்துவக் கழிவுகள் அதிகம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். துங்கபத்ரா நதிக்கரையில் நடந்த புஷ்கரம் விழாவை தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீரை பரிசோதித்ததில், அதன் தரம் மோசமடைந்திருப்பது உறுதியானது.
இதனால், ஆற்றங்கரைகளில் வசிப்போர் நோய் பாதிப்புகள் ஏற்படும் என, அஞ்சுகின்றனர். இதுகுறித்து கர்னுால் மாநகராட்சி கமிஷனர் பாலாஜி கூறும்போது, ''கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ''எங்களிடம் அந்த அளவு நிதி இல்லை. ஸ்வாச் பாரத் திட்டத்தின் கீழ், இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE