உடுப்பி:கர்நாடகாவில், தேனிலவை ஒதுக்கிவிட்டு, சொந்த ஊரின் கடற்கரையை சுத்தம் செய்த புதுமண தம்பதியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள உடுப்பி மாவட்டம் பைண்டூரைச் சேர்ந்த அனுதீப் ஹெக்டேவுக்கும், மினுஷா காஞ்சனுக்கும், சமீபத்தில் திருமணம் நடந்தது. லட்சத்தீவுக்கு தேனிலவு செல்வது குறித்து ஆலோசித்த அவர்களுக்கு, தங்கள் சொந்த ஊரில் சோமேஷ்வரா கடற்கரையில், கழிவுப் பொருட்கள் சேர்ந்திருப்பது நினைவுக்கு வந்தது. அவற்றை அகற்ற இருவரும் முடிவு செய்தனர்.
அடுத்த நாள் தேனிலவுக்கு செல்லாமல், கையுறைகள் மற்றும் கோணிப்பையுடன் கடற்கரைக்கு புறப்பட்ட அவர்களை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி கவலைப்படாத அவர்கள், தங்கள் பணியை ஆர்வமுடன் துவக்கினர்.
இதுகுறித்து அவர்கள், சமூக வலைதளங்களில் தகவல் ஏதும் பகிரவில்லை. இருப்பினும், சேவை குறித்து அறிந்த, 1,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள அவர்களுடன் கைகோர்த்தனர். அனைவரும் இணைந்து கடற்கரையில் இருந்த, 600 டன் கழிவுகளை சேகரித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியதால், புதுமண தம்பதியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE