சென்னை,: சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, தே.மு.தி.க., மாவட்ட செயலர்களுடன், விஜயகாந்த் நாளை(டிச.,13) ஆலோசனை நடத்துகிறார்.
அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., உள்ளது. இருப்பினும், 'தேர்தல் கூட்டணி குறித்து, கட்சி தலைவர் விஜயகாந்த் முடிவெடுப்பார்' என, அவரது மனைவி பிரேமலதா கூறி வருகிறார்.
முரண்டு
உடல்நலம் பாதித்துள்ளதால், கட்சி பணிகளில் விஜயகாந்த் கவனம் செலுத்துவது கிடையாது. இதனிடையே, அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, 10 'சீட்'கள் வழங்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. அதிக சீட்கள் கேட்டு, தே.மு.தி.க., முரண்டு பிடித்து வருகிறது. தேவைப்பட்டால் மட்டுமே, தே.மு.தி.க.,வை கூட்டணியில் வைத்துக் கொள்ளும்படி, அ.தி.மு.க., தலைமைக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை கூறியுள்ளார். இதனால், தே.மு.தி.க.,வை கழற்றிவிடும் நிலைக்கு, அ.தி.மு.க., தலைமை வந்து விட்டது.
கருத்து
இதையறிந்த, தே.மு.தி.க., தலைமை, தி.மு.க.,விடம், 15 சீட்களை கேட்டு ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எந்த கூட்டணியில் இடம் பெறுவது என்பது குறித்து, கட்சி மாவட்ட செயலர்களுடன், விஜயகாந்த் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக, அக்கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
இதில், ஒவ்வொரு மாவட்ட செயலர்களிடமும், தனித்தனியாக கருத்து கேட்கப்பட உள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் ஒருமித்த கருத்தை தெரிவித்தாலும், இறுதி முடிவை வழக்கம் போல, பிரேமலதா எடுக்க உள்ளதாக, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE