புதுடில்லி:காங்கிரஸ் கட்சியுடன், தேசியவாத காங்கிரசை இணைத்து, அக்கட்சியின் புதிய தலைவராக, சரத் பவார் பொறுப்பேற்க உள்ளதாக, டில்லி வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதையடுத்து தற்காலிகமாக காங்., தலைவராக, சோனியா, 74, பொறுப்பேற்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் பதவியிலும், சோனியா தொடர்ந்தார்.
குழப்பம்
அடுத்த மாதம், காங்., தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. தற்போது உடல்நிலை ஒத்துழைக்காததால், கட்சித் தலைமை பதவி மற்றும் ஐ.மு., கூட்டணி தலைவர் பதவியில் இருந்தும் ஓய்வு பெற்று, அரசியலில் இருந்தே முழுமையாக விலக, சோனியா திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐ.மு., கூட்டணியின் தலைவராக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதிலும், கட்சி தலைமையிடம் குழப்பம் நிலவுகிறது.பல மூத்த தலைவர்களே கட்சிக்கு எதிரான கருத்துக்களை பகிர்வது, தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள தலைவர், அரசியல் அனுபவம் வாய்ந்தவராகவும், கட்சியினரை அனுசரித்து, அதேநேரம் அதிரடி அரசியல் செய்ய தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என, சோனியா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
தலைவர் பதவியை மீண்டும் ஏற்க, ராகுல் மறுத்து வருகிறார். பிரியங்காவுக்கு வழங்கினால், அது மீண்டும், வாரிசு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும். சோனியா குடும்பத்தை சேராத ஒருவர், தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்பதையே, மூத்த தலைவர்களும் விரும்புகின்றனர். அது குறித்து, பல்வேறு இடங்களில் வெளிப்படையாக பேசியும் வருகின்றனர்.
உண்மையில்லை
இவற்றை மனதில் வைத்து, அதிரடியான திட்டம் ஒன்றை, சோனியா செயல்படுத்தப் போவதாக டில்லி வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.ஐ.மு., கூட்டணியின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள சரத் பவாரையே, காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்க, சோனியா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.சரத் பவார் தலைமை வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை, காங்கிரசுடன் இணைத்துவிட்டு, புதிய காங்., தலைவராக அவரை பொறுப்பேற்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சரத் பவாரிடமும் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.இது குறித்து சரத் பவாரிடம் கேட்டபோது, ''ஐ.மு., கூட்டணி தலைவர் மற்றும் காங்., தலைவராக நான் பொறுப்பேற்க போவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை,'' என, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE