விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பம்பை ஆறு வாய்க்கால் புதர்கள் தினமலர் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டதால், தண்ணீர் கடைமடை ஏரி வரை சென்று, முழு கொள்ளவு நிரம்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக கடலுார் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பம்பை ஆறு பிரிகிறது.
அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் 35.40 கி.மீ., துாரம் சென்று, புதுச்சேரி மாநிலம் அம்மனங்குப்பம் அருகே வராக நதியில் இணைகிறது. பம்பை ஆறு கால்வாய் மூலம், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது காங்கியனுார், பள்ளியந்துார், தென்னமாதேவி, அய்யூர் அகரம், கப்பியாம்புலியூர், தொரவி உள்ளிட்ட 26 ஏரிகளுக்கு ஆற்று தண்ணீர் செல்கின்றது.
இந்த ஆற்று பாசனத்தை நம்பி, 26 ஏரிகளில் 2556.73 எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆறு கடந்த பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், பம்பை ஆறு முழுவதும் முட்புதர்கள் மண்டி காடுபோன்ற காட்சியளித்தது. மேலும், பல இடங்களில் மணல் திருட்டு நடந்துள்ளதால், ஆற்றில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, பம்பை ஆற்றின் கரைகள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், 26 ஏரிகளுக்கும் தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை. இதனால், பம்பை ஆற்றை சீரமைக்கக்கோரி, தினமலர் நாளிதழில் கடந்த சில மாதங்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, பம்பை ஆற்றை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். இதில், பம்பை ஆற்றில் அதிகரித்து காணப்பட்ட முட்புதர்கள் சில இடங்களில் அகற்றப்பட்டது.
மேலும், காங்கேயனுார் அணைக்கட்டு, திருவாமாத்துார் அணைக்கட்டு, வாதானுார் சமமட்ட நீர்தேக்கம், வி.மாத்துார் அணைக்கட்டு ஆகியவைகளின் ெஷட்டர்கள் சீரமைக்கப்பட்டது. இதேபோன்று, மாம்பழப்பட்டு பகுதியில் இருந்து 5 கி.மீ., துாரத்திற்கு ஆற்றின் வாய்க்கால் முழுவதுமாக சீரமைக்கப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் தற்போது நிவர் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பம்பை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் ஆற்றின் கடைமடை பகுதியான வாதானுார் ஏரி வரை தண்ணீர் முழுமையாக சென்றது. இதன் மூலம், பம்பை ஆற்று பாசனமான 26 ஏரிகளும் தற்போது முழு கொள்ளவில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், 2556,73 எக்டர் விவசாய நிலங்கள் பயன்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE