நியூயார்க்:அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோரை, இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்களாக, 'டைம்' இதழ் தேர்வு செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து இயங்கும், 'டைம்' பத்திரிகை நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், சிறந்த நபர்களை தேர்வு செய்து, அவர்களை கவுரவித்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் நபர்கள் குறித்து, சிறப்பு இதழ் ஒன்று வெளியிடப்படும். அவர்களின் சாதனை பயணம் குறித்து, அதில் சிறப்பு கட்டுரைகளும் வெளியாகும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்களின் பெயர்களை, டைம் இதழ், நேற்று வெளியிட்டது. அதன்படி, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்வாகி உள்ள, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ், சிறந்த நபர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பைடன் மற்றும் ஹாரிசுடன், முன்கள சுகாதார பணியாளர்கள், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பவுசி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களும் இறுதி தேர்வில் இடம் பெற்றிருந்தன.
இந்த ஆண்டிற்கான சிறப்பு இதழின் முன்பக்கத்தில், பைடன் மற்றும் ஹாரிசின் படங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. அதன்கீழ், 'அமெரிக்காவின் கதை மாறுகிறது' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, ஐரோப்பிய நாடான சுவீடனைச் சேர்ந்த இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், இந்த ஆண்டின் பாதுகாவலர்களாக, முன்கள சுகாதார பணியாளர்கள் மற்றும் இன நீதிக்கான இயக்கத்தின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளிக்கு கவுரவம்!
இந்த ஆண்டின் கதாநாயகர்களின் பெயர்களையும், டைம் இதழ் அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன், ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை கொன்ற போலீசாருக்கு எதிராக, அமெரிக்காவில், போராட்டங்கள் நடந்தன. அப்போது, வாஷிங்டனில், சாலையில் இருந்த, 70க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கு, இரவு நேரத்தில், தன் வீட்டில் அடைக்கலம் தந்து உதவிய இந்திய வம்சாவளியான ராகுல் துபே, இந்த ஆண்டின் கதாநாயகனாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவருடன், ஆஸ்திரேலிய தன்னார்வ தீயணைப்புப் படையினர், ஏழை மக்களுக்கு உணவு வினியோகித்த உணவக உரிமையாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.
மோசமான ஆண்டு!
நாளை மறுநாள் வெளியாக உள்ள டைம் இதழின் முதல் பக்கம், உலக
மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி,
கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும், 2020ம் ஆண்டை, சிவப்பு நிற
கோடுகளால் அடித்து, 'வேண்டாம்' எனக் காட்டும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது.
அதன்கீழ், 'மோசமான ஆண்டு' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE