நியூயார்க்:மும்பை தாக்குதலை திட்டமிட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி லக்விக்கு, செலவுகளுக்காக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் வழங்க, பாக்., அரசுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், 2008ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டவர், ஜாஹிர் ரஹ்மான் லக்வி. லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான இவரை, ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட லக்வி, 2015ல் ஜாமினில் வெளியே வந்தார். சிறையில் இருந்தபோதும், இவர் சொகுசு வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். சிறையில் இருந்து, அடிக்கடி வெளியே சென்று, தன் குடும்பத்தினரை, அவர் சந்தித்து வந்தார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில், அவர் சிறை தண்டனை அனுபவித்து வந்த போதே, ஒரு குழந்தைக்கு தந்தையானார். இந்நிலையில், பயங்கரவாதி லக்வியின் செலவுகளுக்காக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் வழங்க, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, இம்ரான் கான் அரசு முன்வைத்த கோரிக்கைக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும், உணவுக்கு, 50 ஆயிரம்; மருந்துகளுக்கு, 45 ஆயிரம்; பொது பயன்பாட்டு கட்டணங்களுக்காக, 20 ஆயிரம், வழக்கறிஞர் கட்டணத்திற்கு, 20 ஆயிரம் மற்றும் போக்குவரத்திற்காக, 15 ஆயிரம் ரூபாயும், லக்விக்கு வழங்கப்பட உள்ளது.இதேபோல், ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட, உம்மா - தமீர் - இ - நவு பயங்கரவாத அமைப்பின் நிறுவனரும், ஆராய்ச்சியாளருமான மஹ்மூத் சுல்தான் பஷிருதினுக்கு, மாதம், 1.5 லட்சம் ரூபாய் வழங்கவும், ஐ.நா., குழு அனுமதி வழங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE