பொன்னேரி: மாநில நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள குளத்தில், தண்ணீர் நிரம்பி, சாலையில் வழிந்தோடுவதால், விபத்துகளை தவிர்க்க, தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னேரி- - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், திருப்பாலைவனம் கிராமத்தில், சாலையோரம் குளம் ஒன்று உள்ளது. சமீபத்தில், இந்த குளம், காமராஜர் துறைமுக நிறுவனத்தின் சமூக பங்களிப்பின் மூலம், 24 லட்சம் ரூபாயில், துார் வாரி சீரமைக்கப்பட்டது.தொடர் மழையால், தற்போது, குளம் முழுமையாக நிரம்பி, இதிலிருந்து வெளியேறும் தண்ணீர், பொன்னேரி - -பழவேற்காடு சாலையில் வழிந்தோடுகிறது.சாலையோரம் உள்ள இந்த குளத்திற்கு, தடுப்புகள் இல்லாததால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது. சாலையா, குளமா என, தெரியாமல்வாகன ஓட்டிகள் அதில் சிக்குகின்றனர்.தற்போது, சாலையோரம் முழுதும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கைக்காக, மஞ்சள் நிற பிளாஸ்டிக் காகிதங்கள் கட்டி வைக்கப்பட்டு உள்ளன.அசம்பாவிதங்கள் ஏதும் நேரிடும் முன், சாலையோரம் முழுதும் இரும்பு தளவாடங்களால் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE