திருத்தணி: முருகன் மலைக்கோவிலில் உள்ள கடைகளை, யாரும் ஏலம் எடுக்காததால், அனைத்து கடைகளும், நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவர் முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.தவிர, முருகன் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் இரு பிரம்மோற்சவம், டிச., 31ம் தேதி நடக்கும் திருப்படி திருவிழா, ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று தெப்பத் திருவிழாக்களின்போது, பல லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், பூஜை பொருட்கள், பூமாலை, பஞ்சாமிர்தம், முருகன் படங்கள், விளையாட்டு பொம்மைகள் மற்றும் ஓட்டல் போன்றவை செயல்பட, 40க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி, ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடுகிறது.அந்த வகையில், நடப்பாண்டிற்காக மலைக்கோவிலில் உள்ள கடைகளை, கோவில் நிர்வாகம், ஹிந்து அறநிலையத் துறை ஆணையரின் அனுமதி பெற்று, இரண்டு முறை ஏலம் விட தயாரானது. ஏலத் தொகை அதிகம் என, வியாபாரிகள் யாரும், கடைகள் எடுக்க முன்வராததால், நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.வியாபாரிகள் கூறுகையில், 'ஏலத் தொகை குறைத்தால் மட்டுமே, எங்களால், கடைகள் எடுத்து நடத்த முடியும்' என, தெரிவித்தனர்.இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், ஆண்டுக்கு ஒரு முறை, 15 சதவீதம் கட்டணம் அதிகரித்து, ஏலம் விடுவது வழக்கம்.அந்த வகையில் தான், மலைக்கோவில் கடைகள், இரு முறை ஏலம் விட்டோம். கடைகளை யாரும் எடுக்காததால், கடைகள் மூடப்பட்டுள்ளன.அறநிலையத் துறை ஆணையரின் அனுமதி பெற்று தான், ஏலத் தொகை குறைப்பது மற்றும் மீண்டும் ஏலம் விடுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE