காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், குழந்தை பெற்ற பெண்களின் உறவினர்களிடம், மருத்துவமனை ஊழியர்கள், கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.ஏழை, எளிய மக்கள், தனியார் மருத்துவமனைகளில், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, பேறுகாலம் பார்க்க வேண்டியிருப்பதால், அரசு மருத்துவமனையை, பலர் நாடுகின்றனர். அதற்கான, வசதியை சுகாதாரத் துறை ஏற்படுத்தி இருக்கிறது.எனினும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில், பேறுகாலத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், உறவினர்கள் பணம் வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.பெண் குழந்தை பிறந்தால், 500 ரூபாய், ஆண் குழந்தை பிறந்தால், 1,000 ரூபாய் என, கட்டணம் நிர்ணயித்து, கட்டாய வசூல் செய்கின்றனர்.இது குறித்து புகார் அளித்தாலும், மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என, கூறப்படுகிறது.இது குறித்து கேட்க, மருத்துவமனை கண்காணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் பதிலளிக்கவில்லை.அதேபோல், குழந்தை பெற்ற பெண்கள், மருத்துவமனையில் தங்கும் நாட்களில், அவர்களுக்கு தேவையான உணவும் முறையாக வழங்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.இதற்கு முன், இவ்வாறு பணம் வசூல் செய்தவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின்படி, சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்; சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது, பழைய நிலையே வந்துவிட்டதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE