மாமல்லபுரம்: புதைவட மின் இணைப்பில், வீடுகளுக்கு மின் சாரம் வழங்கப்படுவதாக, பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலா இடமாக விளங்குகிறது. இவ்வூர், பல்லவர் கால கலைச் சிற்பங்களை காண, உள், வெளிநாட்டுப் பயணியர் வருகின்றனர்.இப்பகுதியில், அடிக்கடி மின் தடை, மின்னழுத்த குறைபாடு என ஏற்பட்டு, இப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர்.கடலோர பகுதியானதால், புயல், சூறாவளி பேரிடரில், மின்கம்பம் விழுந்து, கம்பி அறுந்து, மின் மாற்றி பழுதடைந்து, சில நாட்கள் மின்சாரம் தடைபடுகிறது. ஒரு நாளில், 10 மெ.வா., மின்சாரம் நுகரும் சூழலில், மின் வினியோக மேம்பாடு அவசியமாகிறது.எனவே, மத்திய அரசின், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தில், 10.19 கோடி ரூபாய் மதிப்பில், 2018ல், புதைவட மின் இணைப்பு திட்டப் பணிகள் துவக்கப்பட்டன.இத்திட்டத்தில், 100 கி.வா., மின் திறனில், மூன்று மின் மாற்றிகள்; 63 கி.வாட்டில் - 35 மின் மாற்றிகள்; 25 கி.வாட்டில் - 10 மின்மாற்றிகள்; துணைமின் நிலையத்தில், 8 எம்.வி.ஏ., திறன் மின்மாற்றி; 27 கி.மீ., நீள உயரழுத்த மின் தடம், 35 கி.மீ., நீள தாழ்வழுத்த மின் தடம் என, நிலத்தடி புதைவடம் அமைக்கப்பட்டது.இது குறித்து, மின் வாரிய பொறியாளர் வினோத்குமார் தெரிவித்ததாவது:புதைவட மின் இணைப்பு பணி நிறைவடைந்தது. இதிலிருந்து, வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இணைப்பு வழங்கப்பட்ட பகுதிகளில், மின்கம்பி தடம் அகற்றப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE