சென்னை: சிட்லபாக்கம் பகுதியில், பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பால், வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., தனியாருக்கு இணையான சேவை வழங்கி வருகிறது. இருந்தாலும், பொதுப் பணித்துறை, மின் வாரியம் போன்றவை, கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும்போது, பி.எஸ்.என்.எல்., ஒயரை துண்டித்துவிடுவதால், பொதுமக்களுக்கு உரிய சேவை கிடைப்பதில்லை. இதை சரிசெய்வதற்கும் நீண்ட நாட்கள் பிடிக்கின்றன.இந்த நிலையில், சிட்லபாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது முதல், அப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., சேவை தடைபட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.இது குறித்து, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கூறியதாவது:சேலையூரில் இருந்து, செம்பாக்கம் வரை, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி, பிப்ரவரியில் துவங்கியது. அதற்காக பள்ளம் தோண்டி, கட்டுமானப் பணியும் முடிந்து விட்டது. இந்த பள்ளம் தோண்டும் போது, பி.எஸ்.என்.எல்., ஒயர் துண்டிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு மேல், இப்பகுதியில், சேவை பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சிட்லபாக்கம், திருமுருகன் சாலை, ரமணர் தெரு, மருதுபாண்டியர் தெரு, பாபு தெரு என, பல்வேறு பகுதிகளில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 'லேண்ட்லைன், இன்டர்நெட்' சேவை பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, பலமுறை பி.எஸ்.என்.எல்.,க்கு புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப் பணித்துறை மீது, அவர்கள் குற்றம் சுமத்தி, வாடிக்கையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர். பொதுப் பணித்துறைக்கும், பி.எஸ்.என்.எல்.,க்கும் இடையே ஒத்துழைப்பு இல்லாததால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து, அரசும், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE