சென்னை: சவுகார்பேட்டை துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள், கொலை வழக்கில், 21 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்ற வாளிகள் மற்றும் எம்.கே.பி.நகரில், பிரபல ரவுடியை கைது செய்த போலீசாரை பாராட்டி, கமிஷனர் சான்றிதழ் வழங்கினார். சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் தலித் சந்த், 74. இவரது மனைவி புஷ்பா பாய், 70. மகன், ஷீத்தல்குமார், 40. இவர்களை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இது குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இந்த வழக்கில், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா உள்ளிட்ட, ஏழு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, தலா இரண்டு துப்பாக்கி, கார் மற்றும் ஒரு டூ - வீலர் பறிமுதல் செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 29. இவர் மனைவி சந்தியா, 25. தம்பதி மூன்றரை மாத குழந்தையுடன், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தங்கி பணிபுரிந்தனர். நவ., 9ல், குழந்தையை மர்ம நபர்கள் கடத்தினர். இது குறித்து, கோயம்பேடு மற்றும் தனிப்படை போலீசார் விசாரித்து, சென்னை, திருமங்கலத்தைச் சேர்ந்த காயத்ரி, 33, உட்பட, ஆறு பேரை கைது செய்து, குழந்தையை மீட்டனர். வளசரவாக்கம் காவல் நிலைய எல்லையில், 1999ல் நடந்த கொலை வழக்கில், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, மணிவாசகம், 53, வினித்ராஜ், 47, அறிவானந்தன், 57, ஆகியோர், 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். இவர்களை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்.ஐ., ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கணேசன், 30. ரவுடியான இவர், எம்.கே.பி.நகர் பகுதியில், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். இவரை, இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து, ஒரு துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள், ஆறு வெடிகுண்டு மற்றும் இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பாராட்டி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சான்றிதழ் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE