சென்னை: ''பெருங்குடி குப்பை கிடங்கில், 125 ஏக்கர் நிலம், மீண்டும் சதுப்பு நிலமாக மாற்றப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது:சென்னையில், வழக்கத்தை விட, இந்தாண்டு கூடுதலாக, 60 சதவீதம் மழை பெய்துள்ளது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு, இலவச உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஆறு நாட்களில், 1.05 கோடி மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டுள்ளது.'நிவர்' மற்றும் 'புரெவி' புயல்களால், சென்னையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அவற்றில் இருந்து மாநகராட்சி மீண்டுள்ளது. பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளான செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட, 23 இடங்களில் மழைநீர் தேங்கியது.இதற்கு, நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், இதற்காக, பொது தலைமை பொறியாளர் நந்தகுமார் தலைமையில், வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 400 கோடி ரூபாயில், ஐந்து மழை நீர் வடிகால் அமைக்கப்படும்.இது போன்ற திட்டத்தால், 50 செ.மீ., மழை பெய்தாலும், தண்ணீர் தேங்காது. அதேபோல், சென்னையின் மைய பகுதிகளில், 21 இடங்களில் மழைநீர் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.நகர வளர்ச்சியில், பள்ளிக்கரணை சதுப்பு நில பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், பெருங்குடி குப்பை கிடங்கின் மொத்த பரப்பான, 225 ஏக்கரில் உள்ள குப்பை, 'பயோ மைனிங்' முறையில் அகற்றப்பட உள்ளது. இதன் வாயிலாக, 100 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே, குப்பை சேகரிக்கப்படும். மற்ற, 125 ஏக்கர் பழைய நிலையில், சதுப்பு நிலமாக மாற்றப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE