சென்னை:''விவசாயிகளின் நண்பன் மோடி என்ற இயக்கத்தின் கீழ், தமிழகம் முழுதும், 1,000 இடங்களில், விவசாயிகளை அழைத்து, வேளாண் திட்டங்கள் குறித்து பேச உள்ளோம். இம்மாதம் இறுதியில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தமிழகம் வர உள்ளார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.
பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:புதிய வேளாண் திருத்த சட்டங்கள், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு, அவர்களே விலை நிர்ணயம் செய்ய வழி வகுக்கின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போலி நாடகம்விவசாயிகள் விரும்பிய நபருக்கு, பொருட்களை விற்கலாம்; எங்கு வேண்டுமானாலும் விற்கலாம்.
பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சட்டம் கொண்டு வந்துள்ளோம். ஆனால், தி.மு.க.,- காங்., - தேசியவாத காங்., கட்சிகள் போலி நாடகமாடுகின்றன.தி.மு.க., 2016ல், சட்டசபை தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகள் விளைபொருட்களை விற்க, நடவடிக்கை எடுப்போம்' என கூறியதை, நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.
இதை, தமிழக விவசாயிகள் உணர்ந்துள்ளதால், தமிழகத்தில், 'பந்த்' தோல்வியை தழுவியது. 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற இயக்கத்தை, துவக்கி உள்ளோம். இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுதும், 1,000 இடங்களில், விவசாயிகளை அழைத்து பேச உள்ளோம். பதிலடிவிவசாயிகளுக்கு வேளாண் திருத்த சட்டங்களின் பயன்களை எடுத்துரைப்பதோடு, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களையும் எடுத்துரைப்போம்.
தேசிய தலைவருக்கு பாதுகாப்பில்லாத நிலை, மேற்கு வங்கத்தில் உள்ளது. மேற்கு வங்க மக்கள், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு, தகுந்த பதிலடி கொடுப்பர்.வெற்றிவேல் யாத்திரைக்கு, பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். தமிழகத்தில், எத்தனை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற விபரத்தை, தேசிய தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம். வரும், 30, 31, 1ம் தேதிகளில், தேசிய தலைவர் நட்டா, தமிழகம் மற்றும் புதுச்சேரி வர உள்ளார். இவ்வாறு, முருகன் கூறினார்.
'மாஜி' அமைச்சர் மகன்பா.ஜ.,வில் ஐக்கியம்
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித், சென்னை மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கிரிநாத், சோழிங்கநல்லுார் தி.மு.க., முன்னாள் வட்ட செயலர் ரகு, திரைப்பட இயக்குனர் கோதண்டராமன்.மேலும், திரைத்துறையைச் சேர்ந்த முருகையன், அன்புக்கரசி, ஜெயம் மைக்கேல் ஆகியோர், நேற்று பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மாநில தலைவர் முருகன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE