கோவை;மத்திய அரசின் அறிவிப்பின் படி, 19 லட்சத்து 70 ஆயிரத்து 540 கிலோ சுண்டல் கோவை வந்துள்ளது. முன்னுரிமை கார்டு அடிப்படையில், வினியோகம் நடந்து வருகிறது.கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஜூலை முதல்- நவம்பர் வரை 5 மாதங்களுக்கு, மாதந்தோறும் ஒரு கிலோ வீதம் ஒரு ரேஷன் கார்டுக்கு, 5 கிலோ சுண்டல் கடலை வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.தமிழகத்தில் சுண்டல் வினியோகம் தாமதமாக துவக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து இம்மாதம், 5 கிலோவாக வினியோகிக்கப்படுகிறது.முன்னுரிமை பெற்ற கார்டுதாரர்களுக்கு, இம்மாத இறுதிக்குள் வினியோகிக்க, நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 1,028 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 16 ஆயிரத்து 226 ரேஷன் கார்டுகள் முன்னுரிமை பெற்றவை. இந்த கார்டுகளுக்கு, சுண்டல் வினியோக பணிகள் நடந்து வருகின்றன.மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவைக்கு 1,970 டன் சுண்டல், முன்னுரிமை ரேஷன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில் வந்துள்ளது. இதுவரை, 5 லட்சத்து 66 ஆயிரம் கிலோ சுண்டல் விற்பனை செய்யப்பட்டுள்ளது' என்றார்.இந்நிலையில், சுண்டல் வாங்கியவர்களுக்கு, வழக்கமாக வழங்கப்படும் பருப்பு வழங்கப்படாது என்று, ரேஷன்கடை ஊழியர்கள் கூறியதால், பொதுமக்கள் பலர் அதிருப்தி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE