கோவை;குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளில், மாவட்ட சமூக நலத்துறை இறங்கியுள்ளது. இதற்காக, 'இளம் தென்றல் பெட்டகம்' என்ற பெயரில், பயிற்சி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே நடந்தன. தகவலின் பேரில், சில திருமணங்கள் தடுக்கப்பட்டன.கோவை மாவட்டத்தில், குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த, கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பஞ்சாயத்து அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் என ஆக., மாதம் அறிவிக்கப்பட்டது.தற்போது வரை, மதுக்கரை, சூலுார், எஸ்.எஸ்.குளம் உட்பட, 9 வட்டாரங்களில் பஞ்சாயத்து அளவில், குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; மீதமுள்ள வட்டாரங்களுக்கு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.வளர் இளம்பருவ ஆண், பெண்களுக்கான திறன் வளர்ப்பு, பாதுகாப்பான குழந்தை பருவ திட்டம், குழந்தை திருமண சட்டங்கள் மற்றும் தண்டனைகள், கள சவால்கள், பாலினம் சார்ந்த வன்முறை உள்ளிட்ட, விரிவான தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.சமூகநலத்துறை அலுவலர், பஞ்சாயத்து உறுப்பினர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள், காவல்துறையினர், மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு, இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக, 23 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தங்கமணி கூறுகையில், ''குழந்தை திருமணம் இல்லாத மாவட்டத்தை உருவாக்க, பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான விழிப்புணர்வு கையேட்டை, அனைத்து துறை அலுவலர்கள், உறுப்பினர்களுக்கு வழங்கி வருகிறோம். வரும் 18,19 தேதிகளில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இதுகுறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE