கோவையில் சமீபகாலமாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதைத்தடுக்க போலீசாரும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தாலே, இத்தகைய திருட்டுகளை தடுக்க முடியும் என்கிறார், கோவை மாவட்ட எஸ்.பி., அருளரசு.
வீடுகளில் திருட்டு அதிகரித்துள்ளதே... பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?முதலாவதாக தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்களை, வீடுகளில் வைக்கக் கூடாது. வங்கி லாக்கர்களில் வைக்க வேண்டும். பல திருட்டு சம்பவங்களுக்கு, வீட்டுச்சாவிகளை எளிதில் கண்டுபிடிக்க கூடிய இடங்களில் வைப்பதே காரணம். பொருட்களை பிரித்து பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் திருட்டை தடுக்க முடியுமா?குடியிருப்புவாசிகள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதனால், 90 சதவீத திருட்டு வழக்குகளில், குற்றவாளிகள் எளிதில் கண்டறியப்படுகின்றனர். பல திருடர்கள் கேமராவுடன் டி.வி.ஆர்., களையும் திருடிச் சென்று விடுகின்றனர். இதனால், டி.வி.ஆர்.,களை மறைத்து வைக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்களையும் மறைத்து வைக்கலாம். குற்றவாளிகளை பிடிக்க ஒரே வழி கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளே. கடைகளில் வைக்கப்படும் ஒரு சில கேமராக்களை, பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை நோக்கி திருப்பி வைக்கலாம். குற்றவாளி ஒருவர் நோட்டமிடுகிறார் என்பதை எப்படிக் கண்டறிவது?குறைந்த எண்ணிக்கையில் வீடுகள் உள்ள பகுதிகளில், அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்த வேண்டும். குறிப்பாக அப்பகுதியில் கடைகள் வைத்திருப்போர் புதிதாக யாராவது வந்தால், அவர்களை விசாரிக்கலாம். அதன் அடிப்படையில் அவர் குடியிருப்புவாசிகளை உஷார்படுத்தலாம்.
இதுதவிர, இருசக்கர வாகனங்களில் வந்து நோட்டமிடும் குற்றவாளிகளை கண்டறியலாம். பைக்குகளில் வந்து வீடுகளை நோட்டமிடுபவர்கள் பெரும்பாலும், பதிவு எண் இல்லாத வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். அவ்வாறு வருவோரை அடையாளம் கண்டு, போலீசாருக்கு தெரிவிக்கலாம். இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.பணிக்கு சேருவோர் நல்லவரா, கெட்டவரா என எப்படி அறிவது?நிறுவனங்களிலோ, வீடுகளிலோ ஒருவரை பணிக்கு அமர்த்தும் போது அவரது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். அவர்களின் குற்றப்பின்னணியை, ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
போலீஸ் துறை இணையதளத்தில் அதற்கான வசதிகள் உள்ளன.ஆபத்தின் போது பொதுமக்கள், யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?கட்டுப்பாட்டு அறை எண்ணான, 100 ஐ தொடர்பு கொள்ளலாம். தினமும், 40 - 50 அழைப்புகள் புறநகர் போலீசாருக்கு வந்து கொண்டுள்ளது. போலீசார், 10 - 12 நிமிடங்களில் சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்று விடுகின்றனர்.
அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.பி., ஆகியவற்றின் வாட்ஸ் ஆப்எண்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். ரூ.1.50 கோடி கார்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இது முற்றிலும், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே கண்டுபிடிக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE