ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, கத்தியை காட்டி மிரட்டி, நகை கடை உரிமையாளரிடம் இருந்து, 300 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
வடமாநிலமான, ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மகேந்தர், 50. திருவள்ளூரில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். மேலும், இவரிடம் அடகு வைக்கப்பட்ட, மீட்கப்படாத நகைகளை உருக்கி, புதிய நகைகளாக செய்து, கிராமங்களில், சிறிய நகை கடைகளுக்கு விற்றும் வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், மகேந்தரின்மகன் அஷிஷ், 25, இவர்களது நகை கடையில் பணியாற்றும் ராஜ்குமார், 52, ஆகியோர், ஒரு பையில் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, ஆட்டோவில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் சென்றனர்.
அங்குள்ள நகை கடையில், 8 சவரன் கொடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் சென்றனர். அங்கும் ஒரு கடைக்கு, 6 சவரன் கொடுத்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி, அதே ஆட்டோவில் புறப்பட்டனர்.சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கத்தை கடந்தபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். பின், கத்தியை காட்டி மிரட்டி, அஷிஷ் வைத்திருந்த நகை பையை பிடுங்கி சென்றனர்.
இதையடுத்து, மகேந்தர், 300 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்டதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாரிடம், நேற்று மாலை, புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE