சென்னை:முன்னாள் அமைச்சர்கள்செல்வகணபதி, செந்தில் பாலாஜி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி உள்ளிட்டோருக்கு எதிரான அவதுாறு வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெ., தற்போதைய முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் தமிழக அரசை விமர்சித்ததற்காக, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக, தமிழக அரசு வெவ்வேறு நீதிமன்றங்களில், அவதுாறு வழக்குகளை தொடுத்தது.தங்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, செந்தில் பாலாஜி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மைதீன்கான், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் குமரேசன், மனுராஜ், ரிச்சர்டுசன், ரவி ராமசாமி ஆகியோர் ஆஜராகினர்.அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ''இந்த வழக்குகளை ரத்து செய்யக் கூடாது; விசாரணை நீதிமன்றத்தில், வழக்கை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்.
'தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை, முதல்வரின் கடமை, அலுவல் தொடர்பானதாக கருத முடியாது; அவதுாறு என கருதினால், தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுத்து கொள்ளலாமே தவிர, அரசு வழக்கறிஞர் வாயிலாக தொடர முடியாது' எனக்கூறி, மனுதாரர்களுக்கு எதிரான அவதுாறு வழக்குகளை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
கனிமொழி வழக்கு
அவதுாறு வழக்கை எதிர்த்து, தி.மு.க., - எம்.பி., கனிமொழி தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. கனிமொழி சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''எடப்பாடி என கனிமொழி குறிப்பிட்டதை, முதல்வர் என எப்படி எடுத்துக் கொள்ள முடியும்; புகாரிலும், வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவிலும், எடப்பாடி என்பது, முதல்வரை குறிப்பிடுவதாக கூறப்படவில்லை,'' என்றார்.
அதற்கு, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ''எடப்பாடி என்றால், பழனிசாமியை தான் குறிக்கும்; வேறு பெயர்களை குறிக்காது. கலைஞர் என்றால் கருணாநிதி என்பது போல, எடப்பாடி என்றால், பழனிசாமி தான். சின்ன குழந்தைக்கு கூட இது தெரியும்,'' என்றார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை அளிப்பதாக, மூத்த வழக்கறிஞர் நடராஜன் கூறியதை அடுத்து, விசாரணையை, வரும், 18ம் தேதிக்கு, நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையையும், அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE