சென்னை:தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த, 103 கிலோ தங்கம் மாயமானதாக கூறப்படுவது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யும், 'சுரானா கார்ப்பரேஷன்' நிறுவனம், சென்னையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக, தாது மற்றும் உலோக வர்த்தக கழக அதிகாரிகளுக்கு எதிராக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, சென்னை பாரிமுனையில் உள்ள சுரானா அலுவலக கட்டடத்தில் சோதனை நடத்தப்பட்டு, 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கட்டிகளாகவும், நகைகளாகவும் இந்த தங்கத்தை, அங்குள்ள பெட்டகத்தில் வைத்து சீலிட்டு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சாவிகள் ஒப்படைக்கப்பட்டன.
சி.பி.ஐ., விசாரணையில், அன்னிய வர்த்தக கொள்கையை மீறி தங்கம் இறக்குமதி செய்ததாக தெரிய வந்ததால், இரண்டாவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது வழக்குக்காக, தங்கத்தை மாற்றிக் கொள்ள, சி.பி.ஐ., அனுமதி கோரியது. அதை, சிறப்பு நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.அதிகாரிகள் குற்றம் புரியவில்லை என, தாது மற்றும் உலோக வர்த்தக கழக அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அறிக்கை அளித்தது. அதை, நீதிமன்றமும் ஏற்றது.
இதற்கிடையில், பல வங்கிகளில் கடன் பெற்ற வகையில், 1,160 கோடி ரூபாயை சுரானா நிறுவனம் வழங்க வேண்டியதுள்ளதால், தேசிய கம்பெனி சட்ட வாரியம், ஒரு அதிகாரியை நியமித்தது. சுரானா நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வகிக்க, ராமசுப்ரமணியம் என்ற அதிகாரியை நியமித்தது.அந்த அதிகாரியிடம், 400.47 கிலோ தங்கத்தை ஒப்படைக்கும்படியும், தேசிய கம்பெனி சட்ட வாரியம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, வங்கிகளின் பிரதிநிதிகள், சுரானா நிறுவன பிரதிநிதிகள், சி.பி.ஐ., முன்னிலையில் பெட்டகம் திறக்கப்பட்டு, தங்கம் சரிபார்க்கப்பட்டது.
தங்கத்தை எடை போட்டு பார்த்ததில், 103 கிலோ தங்கம் பற்றாக்குறையாக இருந்தது. இதையடுத்து, அந்த தங்கத்தை ஒப்படைக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அதிகாரி ராமசுப்ரமணியம் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கு, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன், விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'சுரானா அலுவலகத்தில் உள்ள எடை இயந்திரத்தை பயன்படுத்தினோம்.
அதில், 400.47 கிலோ என, காட்டியது. 'பெட்டகத்தில் தங்கத்தை வைத்து சீலிட்டு, 72 சாவிகளையும், சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டோம். தங்கம் குறைந்ததற்கு சி.பி.ஐ., பொறுப்பு அல்ல' என, கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:கைப்பற்றப்பட்டது, 296 கிலோ தங்கம் தான்; தவறுதலாக, 400 கிலோ என்று பதிவேட்டில் காட்டப்பட்டு விட்டதாக, சி.பி.ஐ., தரப்பில் கூறப்படுகிறது.
வேறுபாடு சில கிராம் என்றால், அதை புரிந்து கொள்ளலாம்; ஆனால், 100 கிலோவுக்கு மேல் வித்தியாசம் உள்ளது.எனவே, சி.பி.சி.ஐ.டி., போலீசில், மனுதாரர் புகார் அளிக்க வேண்டும். திருட்டு வழக்குப் பதிவு செய்து, எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும். ஆறு மாதங்களில் விசாரணையை முடித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE