மதுரை:'அரசு மருத்துவமனைகளில் புது நியமனங்கள் கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் வைரம் சந்தோஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
கொரோனாவால், அரசு மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இச்சூழலை சமாளிக்க, தனியார் நிறுவனம் மூலம், 'அவுட்சோர்சிங்' முறையில் டாக்டர்களை தேர்வு செய்து, நியமனம் மேற்கொள்ள, தமிழக சுகாதாரத் துறை, ஜூலை 3ல் உத்தரவிட்டது. இதில், விதிமுறைகளை பின்பற்றவில்லை.முறையாக அறிவிப்பு வெளியிட்டு, நேர்காணல் நடத்தி, டாக்டர்களை தேர்வு செய்திருக்க வேண்டும்.
எலக்ட்ரீஷியன், பிளம்பர், வாட்ச்மேன் உட்பட பல உடலுழைப்பு தொழிலாளர்களை, தனியார் நிறுவனம் மூலம் பணியில் ஈடுபடுத்தும் நடைமுறை உள்ளது.ஆனால், மக்களின் உயிரை பாதுகாக்கும் பணிக்கு, தகுதி, திறமையான டாக்டர்களை, தனியார் நிறுவனம் மூலம் தேர்வு செய்வது சரியாக இருக்காது. தனியார் நிறுவனம் மூலம் நியமனம் மேற்கொள்ளும் அரசின் அறிவிப்பிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:இவ்விவகாரத்தில், தற்போது எந்த நிலை உள்ளதோ, அதே நிலை தொடர வேண்டும். புதிதாக நியமனங்கள் மேற்கொள்ளக் கூடாது.எதன் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் மூலம், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கு, தமிழக சுகாதாரத் துறை செயலர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்பி, மூன்று வாரங்கள் ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE